தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் சின்னி ஜெயந்த். ரஜினி – ரேவதி நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தில் அவர் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 1980 90களில் வெளியான ஏராளமான தமிழ் படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக ரஜினியுடன் ராஜா சின்ன ரோஜா அதிசயப்பிறவி படங்களில் நடித்திருந்தார்.
தமிழில் வெளியான காதலர் தினம் கண்ணெதிரே தோன்றினாள் இதயத்தாமரை ஆணழகன் ஊட்டி பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் இதயம் பாட்டு பாடவா நடிகன் மணமகளே வா கிருஷ்ணா பொங்கலோ பொங்கல் கோகுலம் ஈரமான ரோஜாவே மை டியர் மார்த்தாண்டன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சின்னி ஜெயந்த் நடித்திருக்கிறார்.
குறிப்பாக மறைந்த நடிகர் முரளியுடன் அவருக்கு நண்பனாக மட்டும் 22 படங்களில் நடித்தவர் சின்னி ஜெயந்த் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி போல் மிமிக்ரி செய்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் சின்னி ஜெயந்த் இப்போதும் தனக்கான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் முதுமை காரணமாக அவர் படங்களில் நடிப்பதை பெருமளவில் குறைத்து விட்டார்.
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் இந்திய ஆட்சிப் பணி – யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். கடந்த 2022ம் ஆண்டு திருப்பூர் சப் – கலெக்டராக பொறுப்பேற்று மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டார். இப்போது தலைமைச் செயலகத்தில் அவர் முக்கிய முதன்மை பொறுப்பில் அரசு உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சின்னி ஜெயந்த் கூறியதாவது, என்னுடைய மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் அதிகாரியாக விஜய் சாருடன் பணியாற்றுகிறார். விஜய் சாரின் ரூமில் இருந்து ஐந்தாவது ரூம் என்னுடைய மகனுக்கு தான் கொடுத்திருக்காங்க. நான் சினிமாவில் விஜய் சாரோட வேலை பார்த்திருக்கிறேன்.
இப்போது என் மகன் அவருடன் அரசு பணியில் வேலை பார்க்கிறார். இதைவிட ஒரு அப்பாவுக்கு என்ன பெருமை வேண்டும்? என்று நடிகர் சின்னி ஜெயந்த் அந்த விழா மேடையில் பெருமையாக பேசியிருக்கிறார். வழக்கமாக நடிகர்களின் மகன்கள் அல்லது மகள்கள் சினிமா துறைக்கு வரும் நிலையில் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் கலெக்டராக இருப்பது குறிப்பிடத்தக்கது.





