வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்திருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் லியோவில் இருந்து வெளியான பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லியோ திரைப்படம் வெளியானது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் லியோ ரிலிஸுக்கான கொண்டாட்டங்கள் களைகட்டின.
இந்த நிலையில் படமும் நல்ல விமர்சனத்தை பெற்று உள்ளது. குறிப்பாக முதல் பாதியில் லோகிஸ் கனகராஜ் பூந்து விளையாடி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். விஜயின் அறிமுகக் காட்சி, கழுதைப்புலியை அவர் அடக்குவது, காபி ஷாப் சண்டை, மார்க்கெட் சண்டை, இடைவெளிக் காட்சி என அனைத்தும் கச்சிதமாய் இருந்தன.
இரண்டாம் பாதி தொடக்கத்தில் நன்றாக இருந்த நிலையில் பிளாஷ்பேக் காட்சிகள் சற்று சலிப்பூட்டும் வகையில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் எல்சியு கான்செப்ட் திணிக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதன் காரணமாக லியோ படத்தின் வசூல் குறைந்து இருப்பதாக சிலர் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாயை தொட்டிருக்கலாம் என்று பலரும் கூறி வந்த நிலையில், 148 கோடியே 50 லட்சம் ரூபாயை லியோ வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்படத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்ச சாதனையை லியோ படைத்தது. ஆனால் இதன் பிறகு இரண்டாம் நாள் வசூல் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதேசமயம் முதல் நாள் வசூலை விட பாதிக்கும் கீழ் குறைந்திருப்பதாக பலரும் கூறி வந்தனர். அன்று வேலை நாளாக இருந்ததால் தான் இந்த பிரச்சனை என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியபடியே சனிக்கிழமை, லியோ திரைப்படம் அதிக வசூல் ஈட்டியது. அதைவிட ஞாயிற்றுக்கிழமை படத்திற்கு கூட்டம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதுவரை மொத்தம் லியோ திரைப்படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் அந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் பண்ணி உள்ளதாம். இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை இருப்பதால் நிச்சயம் படம் 500 கோடியை தொடும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.





