லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது லியோ படம். விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, மாத்யூ தாமஸ், ஜோஜு ஜார்ஜ், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். லோகேஷ் கடைசியாக இயக்கிய விக்ரம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கேங்ஸ்டரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்தப் படமானது அக்டோபர் 19ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். காஷ்மீர், சென்னை, தலைக்கோணம் ஆகிய பகுதிகளில் நடந்துவந்த ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
படத்தில் விஜய்க்கு மொத்தம் இரண்டு கெட் அப்புகள் என்று கூறப்படுகிறது. த்ரிஷா அவருக்கு மனைவியாக நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சஞ்சய் தத்தான் மெயின் வில்லன் என்றும் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகிய மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைதான் படத்தின் மையக்கரு என்று பேசப்படுகிறது. ஆனால் படம் பார்க்கும்வரை இதில் எதையும் உறுதியாக கூறமுடியாது.
இந்தச் சூழலில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 29ஆம் தேதி அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருக்கிறார். படு மாஸாக அந்த க்ளிம்ப்ஸில் சஞ்சய் தத் தோன்றியிருந்தார். அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்தது. அதுமட்டுமின்றி அந்த க்ளிம்ப்ஸில் கழுகு இருந்ததால் படமானது எல்சியூவில் வருகிறதோ என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பினர்.
இந்நிலையில் படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் வெளியாகியிருக்கிறது. க்ளிம்ப்ஸ் காட்சியில் பென்ஸ் காரில் வந்து இறங்கும் அர்ஜுன் ஒரு கட்டடத்துக்குள் சென்று ஒருவரின் கையை வெட்டும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
#GlimpseOfHaroldDas #LEO 🔥 pic.twitter.com/tz1K9fykJP
— Seven Screen Studio (@7screenstudio) August 15, 2023
மேலும் படத்தில் அர்ஜுன் ஹெரால்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சஞ்சய் தத் பெயர் ஆண்டனி தாஸ், இவர் பெயர் ஹெரால்டு தாஸ் என்று இருக்கிறது. எனவே நிச்சயம் சஞ்சயும், அர்ஜுனும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என இப்போதே டிகோட் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இந்த க்ளிம்ப்ஸ் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.





