மாஸ்டருக்கு பிறகு நடிகர் விஜய், இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்திருக்கும் திரைப்படம் லியோ. இதில், அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கியது.

காஷ்மீர், சென்னை, ஆந்திர மாநிலம் தலக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. காஷ்மீரில் 60 நாட்களுக்கு மேலாக சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், அதில் இருந்த சிரமங்களை படக்குழு வீடியோ எடுத்து வெளியிட்டது.
தொடர்ந்து விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, லியோ திரைப்படத்திலிருந்து நா ரெடி தான் பாடல் வெளியானது. அனிருத் இசையில், விஜயின் சொந்த குரலில் உருவான இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சுமார் 2000 நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமான முறையில் இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். கைதி, விக்ரம் படங்களில் இயக்குனர் கலக்கியிருந்ததால், இந்த படம் அவரது எல் சி யூ வின் கீழ் வருமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், லியோவில் தனுஷ் நடித்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது. இருப்பினும் படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் லியோ பட குழு, தற்போது காஷ்மீருக்கு மீண்டும் விரைந்துள்ளது. அங்கு பத்து நாட்கள் பேட்ச் ஒர்க் பணிகள் நடக்க இருப்பதாகவும், இதில் விஜய் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், படத்தின் வெளியீடு குறித்து விஜய் என்ன சொன்னார் என்பதை கூறியிருக்கிறார். அதாவது, “சார், படத்தின் அறிவிப்புடன் ரிலீஸ் தேதியையும் சொல்லி விடலாம் என்று விஜய்யிடம் கூறினேன். அதற்கு அவர், ரிலீஸ் தேதியை சொல்லிவிட்டு படத்தைக் கொண்டு வருவதற்கு உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா என்று கேள்வி எழுப்பினார். பண்ணிரலாம் சார் என்று நான் கூறியதற்கு, சரி விடு பார்த்துக் கொள்ளலாம் என்று தளபதி பதிலளித்தார்” என லலித் குமார் பேசியிருக்கிறார். வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





