தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் அஜீத்குமார். அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்பட்ட நிலையில் அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நிராகரித்தவர். மேலும் ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர். தீவிர கார் ரேஸ் பைக் ரேஸ் பிரியராக இருந்து வருகிறார். அடுத்ததாக அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படம் ரெட். இயக்குனர்கள் சுந்தர் சி மற்றும் பாலாவிடம் உதவி இயக்குனராக பணி செய்த சிங்கம்புலி, ராம்சத்யா என்ற புதிய பெயரில் ரெட் படத்தின் இயக்குனராக அறிமுகமானார். அவர்தான் ரெட் படத்தை இயக்கினார். ரெட் படத்தில் சிங்கம்புலி பணி செய்த போது அவருக்கும் அஜீத் குமாருக்கும் இடையே மிகவும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
அதன் பிறகு 2007ம் ஆண்டில் அஜீத்குமார் பில்லா என்ற படத்தில் நடித்தார். அப்போது இயக்குனர் சிங்கம் புலியையும் தன்னுடன் மலேசியா படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்று அவருடன் ஒரு மாத காலம் நெருக்கமாக பழகும் அளவுக்கு அவர்களது நட்பு இருந்துள்ளது. இதற்கு பில்லா படத்தில் சிங்கம்புலி நடிக்கவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சிங்கம்புலி கூறியதாவது, திடீரென ஒரு நாள் அஜீத் சார் உங்களை பில்லா படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா கிளம்பி வரச் சொல்கிறார் என்று தகவல் வந்தது. அந்தப் படத்தில் நடிப்பதற்காகவா என்று நான் கேட்டேன். அது சஸ்பென்ஸ் என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால் அங்கே மலேசியா சென்றதும் தான் அஜீத்குமார் என்னுடன் படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு, அவர் நடிக்கும் காட்சிகள் பற்றி விவரித்துக் கொண்டு அது பற்றிய சில ஐடியாக்கள், சந்தேகங்களை பகிர்ந்து கொண்டு 30 நாட்கள் என்னை அவர் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். இத்தனைக்கும் அந்த படத்தில் ஒரு தொழில்நுட்ப கலைஞராகவோ நடிகராகவோ நான் பணியாற்றவில்லை.
ஆனால் 30 நாட்கள் முடிந்ததும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து எனக்காக ஒரு கணிசமான தொகையையும் சம்பளமாக பெற்று தந்தார். அந்த அளவுக்கு என் மீது அவர் அன்பும் நல்ல மதிப்பும் வைத்திருக்கிறார் என்று சிங்கம்புலி அதில் கூறியிருக்கிறார். இவர் நடிகர் சூர்யா நடித்த மாயாவி படத்தை டைரக்ட் செய்தவர். மேலும் முத்துக்கு முத்தாக மாயாண்டி குடும்பத்தார் தாய்கிழவி மகாராஜா கருப்பன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





