ஒவ்வொரு வருடமும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தை குறித்து முக்கிய அப்டேட்டுகள் வெளிவருவது வழக்கம். கடந்த வருட பிறந்தநாளுக்கு “வாரிசு” டைட்டில் அறிவிப்பு போஸ்டர்கள் வெளிவந்தன. அதே போல் இந்த வருடமும் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் “லியோ” திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட் வெளிவரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலோடு விஜய் பிறந்தநாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சமீப நாட்களாகவே வருகிற விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளதாகவும் அந்த டீசருக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் எனவும் சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று பின்னாளில் தெரிய வந்தது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.
அதே போல் வருகிற விஜய் பிறந்தநாள் அன்று “தளபதி 68” திரைப்படத்தின் பூஜை போடப்படும் என்று ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஆனால் அந்த செய்தி குறித்த உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆதலால் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளுக்கு எந்த அப்டேட்டும் இல்லையா? என்று மிகவும் கவலையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்படி ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளதாம். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு இருக்கின்றனர்.
“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோஸில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 2000 டான்சர்கள் நடனமாடும் ஒரு பாடல் காட்சியை படக்குழுவினர் படமாக்கி வருகிறார்களாம். “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





