விக்ரமிற்கு பிறகு உலகநாயகனுக்கு ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லையே என்று ரசிகர்கள் கவலைப்பட்டு இருந்த வேளையில், அவர்களுக்கு இன்பமான செய்தி இந்த ஆண்டு கிடைத்துள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று திரைப்படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் வெளியாக இருக்கின்றன.
இதில் ஒரு படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். ஆம் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி திரைப்படத்தில் தான் கமல்ஹாசன் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என அசத்தலான கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
அடுத்ததாக, தக் லைப் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் மணிரத்னம். சிம்பு, திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர் என மிகப் பெரிய பட்டாளமே இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது.
இதுபோக, அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை மாதம் வெளியாகிறது. அனேகமாக, பன்னிரண்டாம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் ஷங்கர் எடுத்திருக்கிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இதன் வேலைகள் நடைபெற்றன. சேனாதிபதி கதாபாத்திரம் மீண்டும் வருவது போல் இதனை சங்கர் எடுத்திருக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, காஜா அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் என ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவாகி இருப்பதால், சங்கர் இதனை எவ்வாறு எடுத்து இருப்பார் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். படத்தின் கிளைமாக்ஸில், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ட்ரெய்லரை சங்கர் இணைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகம் எடுக்கும் போது அவர் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளையும் முடித்து விட்டார். இதனால், அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய திரைப்படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





