மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து, விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. இதில், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், அனுராக் காஷ்யப் என ஒரு இயக்குனர்கள் பட்டாளமே நடித்துள்ளது. கதாநாயகியாக த்ரிஷா நடிக்க, மடோனா செபஸ்டின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. கடும் குளிருக்கு மத்தியில் கிட்டத்தட்ட 100 நாட்களாக எடுத்த படப்பிடிப்பின் அனுபவங்களை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டது. காஷ்மீரை தொடர்ந்து சென்னை, ஆந்திர மாநிலம் தலக்கோணம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படக்குழு சூட்டிங்கை நடத்தியது.
சமீபத்தில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, நா ரெடியா பாடலை லியோ படக்குழு வெளியிட்டது. சுமார் 2000 நடன கலைஞர்களுடன் உருவாகி இருக்கும் இந்த பாடலை, நடிகர் விஜய் பாடினார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் விஷ்ணு எடவன் எழுதியிருக்கும் பாடல்களின் வரிகள் புதுவித அனுபவத்தை கொடுக்க, பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. ஏராளமான இளைஞர்களின் ரிங்டோனாகவும் இந்தப் பாடல் மாறியுள்ளது.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற செய்து வரும் லியோ படம் குறித்து ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கேள்வி, படம் எல் சி யு வில் வருமா இல்லையா என்பது மட்டும்தான். மாநகரம் படத்தைத் தொடர்ந்து, கார்த்தியுடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களின் ஆதர்சன இயக்குனராக உருவெடுத்தார். தொடர்ந்து கமலுடன் பணியாற்றி விக்ரம் படத்தை எடுத்த அவர், கைதியில் விட்ட சில முக்கியமான காட்சிகளை விக்ரம் படத்துடன் தொடர்புபடுத்தி இருந்தார். அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் வந்த ரோலக்ஸ் என்னும் சூர்யாவின் கதாபாத்திரமும் பலரையும் கவர்ந்தது. லோகேஷ் கனகராஜின் இந்த எல் சி யு யுக்தி நன்றாக இருப்பதாக கூறியுள்ள ரசிகர்கள், விஜயின் லியோ படமும் அந்த வரிசையில் இருக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ், லியோ படத்தின் கதை தனக்கு தெரியும் என்றும், படம் தொடர்பான விவாதங்களில் தான் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் லியோவில் இருக்கிறீர்களா என கேள்வி எழுப்ப, அதனை அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் அறிந்து கொள்வீர்கள் என்று அர்ஜுன் தாஸ் பதில் அளித்து இருக்கிறார். நடிகரின் பதிலால் உற்சாகமடைந்துள்ள விஜய் ரசிகர்கள், கண்டிப்பாக இது எல் சி யு தான் எனக் கூறி வருகின்றனர். ஏற்கனவே கைதி மாஸ்டர் விக்ரம் படங்களில் அர்ஜுன் தாஸ் நடித்திருப்பதால், நிச்சயமாக லியோவிலும் அவர் இடம் பெற்றிருப்பார் என அவர்கள் ஆருடம் கூறி வருகின்றனர்.





