கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 2 படம்தான். அதற்கு பின் 2020ம் ஆண்டில் நவம்பரில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று படமும், 2021ம் ஆண்டில் நவம்பரில் வெளியான ஜெய் பீம் படமும் வணிக ரீதியாக சூர்யாவுக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டில் நவம்பர் வரை சூர்யா நடிப்பில் 10 படங்கள் வெளியாகி உள்ளன. சிங்கம் 3, பசங்க 2, காப்பான், தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, மாஸ், அஞ்சான், எதற்கும் துணிந்தவன், 24 மற்றும் கடைசியாக வெளியான கங்குவா வரை 10 படங்களுமே மிகப்பெரிய தோல்வி படங்களாக தான் சூர்யாவுக்கு அமைந்தன.
இதில் வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், பாண்டிராஜ், ஹரி, சிறுத்தை சிவா, லிங்குசாமி, கேவி ஆனந்த், செல்வராகவன் என பிரபல இயக்குனர்கள் இயக்கிய படங்களாக இருந்தும் சூர்யாவுக்கு 10 ஆண்டுகளாக தொடரும் தோல்வி என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அதிலும் கங்குவா கொடுத்த படுதோல்வி மிகவும் வருத்தமளிப்பதாகும்.
ஆனால் கங்குவா படத்தில் கதை, திரைக்கதை இல்லை, இசையில் சொதப்பல் போன்ற காரணங்கள் இருந்தாலும் சூர்யா தனது 100 சதவீத உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். தன்னால் இயன்ற அளவுக்கு தன் திறமையை, ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தி தன் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஒரு நடிகராக அவர் ஜெயித்த கங்குவா, ஒரு திரைப்படமாக தோற்றதுதான் இங்கு கசப்பான அனுபவமாக மாறிவிட்டது.
இதுபோன்ற சூழலில், கங்குவா படத்தின் மொத்த தோல்விக்கும் காரணமாக படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா மீதுதான் சூர்யாவுக்கு பலத்த கோபமும், எரிச்சலும், அதிருப்தியும் ஏற்பட வேண்டும். ஆனால் சூர்யா, அவரிடம் அதே பழைய நட்புடன் பாசத்துடன் இன்னும் இருந்து வருகிறார். இன்று சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு சிறுத்தை சிவா, சூர்யா உள்ளிட்டோர் சென்று சுவாமியை வழிபட்டுள்ளனர்.
யோக நரசிம்மரை கோவிலில் சுவாமி வழிபாடு நடத்தினால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இனி சூர்யா நடிக்கும் படங்கள், சிறுத்தை சிவா இயக்கும் படங்கள் வெற்றிப் படங்களாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனைக்காக அவர்கள் அந்த கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. சூர்யா 44, சூர்யா 45 படங்கள் அடுத்தடுத்து உருவாகும் நிலையில் இந்த படங்களாவது சூர்யாவின் பெயர் சொல்லும் படங்களாக அமையட்டும்.





