நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1975ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் எந்தவிதமான சினிமா பின்னணியும் ஆதரவும் இல்லாமல் யாருடைய சிபாரிசும் இல்லாமல் நுழைந்தவர். தனது உழைப்பால் திறமையால் நடிகராக ஜெயித்துக் காட்டியவர். கடந்த 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இந்திய சினிமாவில் வலம் வருபவர். 74 வயதிலும் இப்போது ஹீரோவாக நடித்துக்கொண்டு இருப்பவர்.
இதே போல் சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்குள் வந்து வெற்றிக்கொடி நாட்டி அல்ட்டிமேட் ஸ்டாராக உயர்ந்தவர்தான் நடிகர் அஜீத்குமார். ரஜினியை போலவே திறமையால் உழைப்பால் இன்று முன்னணி நட்சத்திரமாக நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
கடைசியாக அஜீத்குமார் நடிப்பில் வெளியான குட்பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தையும் டைரக்ட் செய்ய இருக்கிறார். அஜீத்குமார் இப்போது கார் ரேஸில் இருப்பதால், வரும் நவம்பரில் அவரது அடுத்த படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.
நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை சினிமாவை போலவே விளையாட்டிலும் அவருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. குறிப்பாக பைக் ரேஸ் காா் ரேஸ் துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிக ஆர்வமாக இருக்கிறார். குறிப்பாக பல நாட்களுக்கு தொடர்ந்து பைக்கில் பல ஊர்களுக்கு டிராவல் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. ரொம்பவும் உற்சாகமாக இருந்தால் தனது நண்பர்களுக்கு அவரது கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜீத்குமார் நடித்த ஒரு படத்தின் படபூஜை துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் அஜீத்குமார் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமாரிடம், ரஜினி உங்களிடம் என்ன பேசினாா் என்று கேட்கப்பட்டது.
அப்போது ரஜினிகாந்த் தனக்கு கூறிய அறிவுரைகள் குறித்து அந்த நேர்காணலில் நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, உங்கள் மீதான எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும். ஒப்பீடுகள் நிறைய வரும். ஜாக்கிரதையா படங்கள் பண்ணுங்க. எந்த விஷயத்தையும் ஈஸியாக எடுத்துக்காம அதில் சீரியஸா கவனம் வெச்சு செய்யுங்க என்று ரஜினிகாந்த் கூறினார் என்று அந்த நேர்காணலில் நடிகர் அஜீத்குமார் தெரிவித்திருக்கிறார்.





