மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தனது தனி முத்திரையை பதித்த லோகேஷ் கனகராஜூக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கிய படம் கைதியும் பெரிய வெற்றியை பெற்றது.
நடிகர் கார்த்தி நடிப்பில் 57 இரவுகளில் படமாக்கப்பட்ட கைதி படத்தில் கதாநாயகி கிடையாது, பாடல் காட்சிகள் கிடையாது, படம் முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று லோகேஷ் கனகராஜூக்கு மாஸ் டைரக்டர் என்ற வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதைத்தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்து கமல்ஹாசன் நடித்த விக்ரம் படமும் லோகேஷ் கனகராஜூக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. நடிகர் கமல்ஹாசனுக்கு கம்பேக் கொடுத்தது.
விக்ரம் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், விமர்சன ரீதியாக லியோ பெரிய அடி வாங்கியது. ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இப்போத இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் வாரங்களில் துவங்க இருக்கிறது.
கூலி படத்தில் நாகார்ஜுனா உபேந்திரா சத்யராஜ் அமீர்கான் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும் படத்தில் ஸ்ருதிஹாசனும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்க உள்ளார். கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதற்குள் கூலி படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் தெரியவந்துள்ளது.
கூலி, கைதி 2 படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க போகும் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் இப்போது அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சி முடிந்து அவர் தமிழ்நாட்டுக்கு திரும்பியவுடன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் தான் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். இது குறித்து இருவரும் பேசி முடிவு செய்து விட்டனர். அதன்படி கூலி, கைதி 2 படங்களைத் தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் 2ம் பாகமான விக்ரம் ரிட்டர்ன்ஸ் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இது கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





