மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ச்சியாக ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இதில் விஜய்யுடன் அவர் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டும் கலவையான விமர்சனத்தை பெற்றன. இருப்பினும் அவை வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.
அதிலும் விக்ரம் திரைப்படம் தான் லோகேஷ் கனகராஜ் அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக அதில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்னும் தனது முந்தைய திரைப்படங்களின் கதாபாத்திரங்களை அதில் புகுத்தினார். அது மிகச் சரியாக அவருக்கு ஒர்க் அவுட் ஆனது.
கைதி படத்தின் கதாபாத்திரங்கள் அதில் வர பலரும் விக்ரம் படத்தை கொண்டாடினர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா வந்தது, படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. இந்தப் படம் கொடுத்த தாக்கத்தால், அவரது லியோ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதனை பூர்த்தி செய்ய லோகேஷ் கனகராஜ் தவறிவிட்டார்.
குறிப்பாக இரண்டாம் பாதியில் நரபலி என்னும் கான்செப்ட் கொண்டு வந்து ரசிகர்களை நோகடிக்க செய்தார். இந்த நிலையில் தற்போது அவர் ரஜினிகாந்துடன் பணிபுரிந்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் நண்பராக சத்யராஜ் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹைதராபாத்தில் இதற்கான படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் எடுத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு, கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் எடுக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட் நடிகர் அமீர்கான் உடன் இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்து வரும் மைத்திரி மூவிஸ் தான், இந்தப் படத்தை எடுக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





