லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தின் இரண்டாம் பாதி சற்று தொய்வாக இருந்ததாகவும், லாஜிக் மீறல்கள் அதிகம் வைக்கப்பட்டிருந்தது என்றும் படத்தைப் பார்த்தவர்கள் கூறியிருந்தார்கள்.
இருப்பினும் கூலி திரைப்படம் வசூல் ரீதியாக ஏமாற்றம் தரவில்லை. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்கு முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவும் லோகேஷ் கனகராஜ் ஒப்புக்கொண்டார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தற்காப்பு கலையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் வேறு ஒரு திட்டத்தை வைத்திருப்பது அண்மையில் அம்பலமானது. கூலி திரைப்படத்தின் ரிலீஸிற்கு முன்பு அவர் கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறாராம். அது இருவருக்குமே பிடித்துப் போனதால் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் ரஜினிகாந்த் உடன் இணைவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் ரஜினிகாந்த் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில், சூர்யாவை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யா வருவார். அது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோன்று இதிலும் ஒரு காட்சி வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், திரையரங்குகள் என்ன ஆகும் என்று ரசிகர்கள் ஆவலோடு சொல்லி வருகின்றனர்.





