மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு முன்பு எந்த ஒரு இயக்குனரிடமும் பணி புரியாமல், நேரடியாக களத்திற்கு வந்த உச்சபட்ச இயக்குனர். சென்னையில் ஒரு வங்கியில் பணியாளராக பணிபுரிந்த அவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்து தற்போது சாதித்திருக்கிறார்.
மூத்த நடிகர்களான ரஜினி கமல்ஹாசன் விஜய் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்து விட்டார் லோகேஷ் கனகராஜ். இதில் கமல்ஹாசன் உடன் அவர் இணைந்து கொடுத்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்னும் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி, சபாஷ் போட வைத்தார்.
தளபதி விஜய் உடன் சேர்ந்து மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு தரமான திரைப்படங்களை அவர் கொடுத்திருக்கிறார். இப்படியான சூழலில் தான் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படமாக கூலி உருவாகி இருக்கிறது. வரும் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில், அதற்கான இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இதனுடன் படத்தின் முன்னோட்டமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் ரஜினிகாந்த் கடைசியாக கூறும் இந்த தேவா பத்தி தெரிஞ்சி இருந்தும் விளையாண்டு இருக்க என்னும் வசனம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. வெளிநாடுகளில் இதற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.
ஆனால் இதற்கான பணிகள் டிசம்பர் மாதம் கழித்து தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த இடைவேளையில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் லோகேஷ். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இதனை இயக்குகிறார். இதில்தான் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக அண்மையில் பேட்டியளித்த அவர்,
என்னை திரைப்படங்களில் நடிக்க கூறி பலரும் கேட்டு வருகிறார்கள். பராசக்தி திரைப்படமும் எனக்கு அப்படிதான் வந்தது. அதன் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுதாவிடம் பேசி ஓகேயும் ஆகிவிட்டது. சிவகார்த்திகேயனும் எனக்கு இந்த ரோல் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், கூலி திரைப்படத்தின் வேலைகளை தொடங்க வேண்டும் என்பதால் நான் அதிலிருந்து விலகி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.





