தமிழ் சினிமாவில் இதுவரை 5 படங்களை மட்டுமே இயக்கி ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், குறும்படங்களை இயக்கிய அனுபவத்தில் நேரடியாக தமிழ் சினிமா களத்தில் இயக்குனராக இறங்கியவர். யாரிடமும் அவர் உதவி இயக்குனராக பணி செய்யாமல் அவர் நேரடியாக இயக்கிய படம் மாநகரம், பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது.
இந்த படத்துக்கு பிறகு கார்த்தி நடித்த கைதி படமும், கமல் நடித்த விக்ரம் படமும் லோகேஷ் கனகராஜை வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. ஆனால் விஜய் நடித்த மாஸ்டர், லியோ படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அந்த படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றமே தந்தன.
குறிப்பாக விஜய் நடித்த லியோ படத்தின் முதல் பாதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், 2ம் பாகம் பெரிய அளவில் சொதப்பியது. குறிப்பாக இரட்டைப் பிறவி, ஜோதிட நம்பிக்கை, நரபலி போன்ற விஷயங்களை இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் கொண்டு வந்தது ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய வைத்தது. படத்தின் தோல்விக்கும் அதுவே முக்கிய காரணமாக மாறியது.
இந்நிலையில் அடுத்த படமாக ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், வருகிற மே 1ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் முன்னணி நடிகர்கள், முக்கிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து, பான் இந்தியா படமாக பெரிய வெற்றியை பெற லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூலை எந்த படமும் தொடவில்லை. அந்த சாதனையை கூலி படம் நிகழ்த்திக்காட்ட வேண்டும். இந்த படத்தால் ரஜினிக்கும், தனது படத்துக்கும் அந்த பெருமை கிடைக்க வேண்டும் என்று இறங்கி வேலை செய்து வருகிறார். ஆனால் தக்லைப், விடாமுயற்சி, குட்பேட் அக்லி, தளபதி 69 படங்களும் அடுத்த ஆண்டில் களத்துக்கு வருகின்றன. இதில் ரஜினி சாதிப்பாரா, லோகேஷ் கனகராஜின் கூலி 1000 கோடி ரூபாய் வசூலை சாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.





