தமிழ் சினிமாவில், சில நடிகர்கள் அவர்கள் நடிக்கும் கேரக்டர்களுக்காக அதிகம் மெனக்கெடுவது அடிக்கடி நடப்பதுதான். இதில் மிக முக்கியமாக நடிகர் கமல்ஹாசன், அடுத்ததாக சியான் விக்ரமை சொல்லலாம். நடிகர் சிவாஜி கணேசனும், இதில் மிக முக்கியமானவர். நடிக்கும் கேரக்டரில் தன்னை பொருத்திக்கொள்ள, அதற்கேற்ப மாற்றிக்கொள்ள சிரமப்பட்டு பயிற்சி எடுப்பாராம் சிவாஜி.
நடிகர் கமல்ஹாசன், தன்னுடைய கேரக்டர் திரையில் மிகச்சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக மேக்கப்பில், சண்டை காட்சிகளில், நடனத்தில் மிக அதிகளவில் பயிற்சி எடுப்பவர். உடல் எடையை சட்டென குறைப்பார். திடீரென அதிகரிப்பார். அதேபோல் நடிகர் சியான் விக்ரமும், தன்னுடைய கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்வதில் தயங்காதவர்.
ஆளவந்தான் படத்துக்காக, கமல் உடல் எடையை அதிகரித்தது போல, ஐ படத்தில், பாடி பில்டராக நடிக்க அதிகளவில் உடற்பயிற்சி எடுத்தவர் விக்ரம். அதே போல், நோயாளியாக நடிக்கவும் உடல் எடையை பாதியாக குறைத்தவர். கதாபாத்திரம் நன்றாக வர, இப்படி செய்வதன் மூலம் அந்த படத்தின் தனது நடிப்பை சிறப்பாக காட்டுவதில் கமல், விக்ரம் போன்ற சிறந்த நடிகர்கள், அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படம் கபடி விளையாட்டை அடிப்படையாக கொண்டது. கபடி வீரர் மணத்தி கணேசன் கதையை கருவாக கொண்டது என்பதால், கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்படுகிறது.
இதற்காக கடந்த ஓராண்டாக, துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருகிறார். தூத்துக்குடியில் இருந்து கபடி வீரர்களை சென்னைக்கு வரவழைத்து சென்னையில் துருவ் விக்ரம் பல மாதங்கள் பயிற்சி எடுத்தார். இப்போது மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அவரே நேரில் சென்று, விட்டலாபுரம் என்ற கிராமத்தில் தங்கி, துருவ் விக்ரம் கபடி பயிற்சிகளை தினமும் எடுத்து வருகிறார். கதையில் சம்பந்தப்பட்ட மணத்தி கணேசனே இவருக்கு கபடி பயிற்சிகளை தந்து வருகிறார்.
சினிமாவில் டாக்டராக, நீதிபதியாக, விஞ்ஞானியாக நடிப்பவர்கள் அதற்காக ஆண்டுக்கணக்கில் பயிற்சி எடுப்பதில்லை. கபடி வீரராக நடிக்க, சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம், ஆண்டுக்கணக்கில் பயிற்சி எடுப்பது, காமெடியாக உள்ளது. இவர் பயிற்சி எடுத்து சினிமாவில் நடிக்க போகிறாரா, அல்லது கபடி அணியில் விளையாடி கப் வாங்க போகிறாரா, இதுகுறித்து டைரக்டராவது யோசிக்க வேண்டாமா என சினிமா விமர்சகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





