இயக்குனர் அருண் ராஜா காமராஜ் உடன் பணியாற்றியவர் தான் தமிழரசன் பச்சமுத்து. உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி என்னும் திரைப்படத்தில், படத்தின் எழுத்துப் பணிகளை பார்த்துக் கொண்டார். இதேபோல் எஃப் ஐ ஆர் படத்திலும் அவர் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆக விளங்கினார்.
இப்படியான சூழலில் தான் பலரும் திரும்பி பார்க்கும் வகையில், லப்பர் பந்து என்னும் திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
இங்கு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால், அது பாதி வெற்றி பெற்றுவிட்டது என்று படம் வருவதற்கு முன்பே உறுதியாக கூறலாம். இப்படி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கி இருக்கும் இயக்குனர், படத்தில் கிரிக்கெட்டை மட்டும் கூறாமல் பிற விஷயங்களையும் மிக அழகாக கூறி சபாஷ் போட வைத்திருக்கிறார்.
படத்தில் ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் ஸ்வஸ்திகா என அனைவரும் போட்டி போட்டு நடித்திருப்பதால் லப்பர் பந்து திரைப்படம் வெற்றி பெற்று இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் தினேஷ் நடிப்பை நாம் குறிப்பிட வேண்டும். விஜயகாந்த் ரசிகனாகவும், கிரிக்கெட்டை காதலிப்பவனாகவும் வந்து கவனம் ஈர்த்து இருக்கிறார்.
சாதி பிரச்சனை, மாமியார் மருமகள் இடையேயான உறவு, தந்தை மகளுக்கான உறவு, கணவன் மனைவிக்கு இடையேயான காதல் என இயக்குனர் காட்டிய அத்தனை விஷயங்களும் கச்சிதமாக பொருந்தி, ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கிறது லப்பர் பந்து திரைப்படம். படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவிக் கொண்டிருக்க, வசூலிலும் அந்த திரைப்படம் சாதித்து வருகிறது.
படத்தில் அனைத்துமே நீரோடை போன்று சொல்லப்பட்ட விதம் குறித்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து விளக்கி இருக்கிறார். அதில், நான் வேடிக்கை பார்த்தவன் தான். ஆனால் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் மொழி காட்டமாக தான் இருக்கும். நாம் அதைத்தான் இன்னும் மரியாதையாக கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





