நடிகர் விஜயை தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியவர் அவரது தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்தான். நாளைய தீர்ப்பு என்ற படம்தான் விஜய் நடித்த முதல் படம். அதன்பிறகு சில மசாலா படங்களில் நடித்த அவருக்கு பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள்தான் ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தன.
பிறகு கில்லி சிவகாசி திருப்பாச்சி போக்கிரி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். ஆனால் தொடர்ந்து சினிமாவில் பயணிக்காமல் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.
நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக களத்தில் குதித்து இருக்கிறார். அவரது இயக்கத்தில் உருவான முதல் படம் சிக்மா வெகுவிரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். இவர் ராயன் படத்தில் நடிகர் தனுஷூக்கு தம்பியாக நடித்திருந்தார். சிக்மா படம் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக சிக்மா படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளிவர உள்ள சிக்மா படத்தின் டீசரை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் அசந்து போய் உள்ளனர். விஜயை போலவே அவரது மகனும் தனது திறமையை முதல் படத்திலேயே காட்டி விட்டார் என்று ஜேசன் சஞ்சயை பாராட்டி வருகின்றனர். அப்பா விஜய் போலவே அவரது மகனும் தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை நிரூபிக்கிறார் என்றும் பாராட்டி வருகின்றனர்.
சிக்மா டீசரில் வரும் காட்சிகள் இது நிச்சயம் வெற்றிப்படம்தான் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது. இதற்கிடையே லைகா புரடக்சன்ஸ் நிறுவன முக்கிய நிர்வாகிகள் சிக்மா படத்தை பார்த்துள்ளனர். நிச்சயமாக இது ஒரு வெற்றிப் படம் என்று நம்பிக்கை ஏற்பட்டதால் ஜேசன் சஞ்சயிடம், மீண்டும் லைகா நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று உறுதியாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.





