ஒரு திரைப்படம் உருவாக முதுகெலும்பாகவும் ஆணிவேராகவும் இருப்பது அந்த படத்தை பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்தான். ஒரு இயக்குனர் செய்த கற்பனை கதையை நம்பியும் அவர் இயக்கத்தில் நம்பிக்கை வைத்தும் நடிகர் நடிகைகள் இசையமைப்பாளர் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலருக்கும் வாய்ப்பளித்து ஒரு படத்தை தயாரிப்பாளர் தயாரிக்கிறார்.
ஆனால் இதில் சில படங்கள் ஜெயிக்கின்றன; பல படங்கள் தோல்வியடைகின்றன. என்றாலும் லாபம் நஷ்டங்களை மாறி மாறி சந்திக்கும் தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்றவரை படங்களை தயாரிக்கவே செய்கின்றனர். இதில் கார்பரேட் நிறுவனங்கள் பல தமிழ் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவுக்கு பெரிய அளவில் உதவி செய்கின்றன.
அந்த வகையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்து தமிழ் சினிமாவுக்குள் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் காலடி பதித்தது. முதல் படமே பெரிய வெற்றியை தந்தது. தொடர்ந்து கோலமாவு கோகிலா வடசென்னை ரோபோ 2.0 டான் பொன்னியின் செல்வன் 1 வேட்டையன் போன்ற படங்கள் லைகாவுக்கு பெரிய லாபத்தை தந்தன.
ஆனால் தர்பார் சந்திரமுகி 2 வந்தா ராஜாவா தான் வருவேன் பொன்னியின் செல்வன் 2 லால் சலாம் இந்தியன் 2 விடாமுயற்சி போன்ற படங்கள் மாபெரும் தோல்வி படங்களாக இருந்து மிகப்பெரிய நஷ்டத்தை லைகா நிறுவனத்துக்கு ஏற்படுத்தியது. அதனால் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் விரைவில் மூடுவிழா காணும் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது நடிகர் விஜய் மகன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் ஒரு படம், கதையின் நாயகியை மையப்படுத்திய கதையில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ஒரு படம் என 2 படங்களை கைவசம் வைத்துள்ள லைகா புரடக்சன்ஸ் அடுத்து இந்தியன் 3 படத்தை தயாரித்து ரிலீஸ் செய்ய உள்ளது.
இதையடுத்து வரும் 3 ஆண்டுகளில் 9 படங்களை தயாரிக்க லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது ரஜினி கமல் சிலம்பரசன் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களாகவும் இருக்கும். மகாவீர் ஜெயின்ட் பிலிம்ஸ் என்ற மும்பையை சேர்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், மீண்டும் தயாரிப்பு களத்தில் புது ரத்தம் பாய்ச்சிய தெம்போடு இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.





