மதுரையில் பிறந்தவர் நடிகர் சூரி. பள்ளி படிப்பை கூட நிறைவு செய்யாத நிலையில் சூரி பனியன் தொழில் நகரமான திருப்பூருக்கு வேலை தேடி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறார். 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூரில் பனியன் தொழிலாளியாக இருந்த அவர், அதற்கு பின்தான் சினிமாவில் வாய்ப்பை தேடி சென்னைக்கு சென்றிருக்கிறார்.
அவரது கருப்பான உருவம், ஒல்லியான தேகத்தை பார்த்த யாரும் அவருக்கு சினிமா வாய்ப்பை வழங்க முன்வரவில்லை. சில படங்களில் போன் ஆபரேட்டராக எலக்ட்ரீசியனாக ரிசப்னிஸ்ட் ஆக பணி செய்திருக்கிறார். அப்போதுதான் சுந்தர் சி இயக்கத்தில் உருவான கண்ணன் வருவான் என்ற படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
அந்த படத்தில் உதவி இயக்குனராக பணிசெய்த நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம்புலி, கவுண்டமணியுடன் ஒருவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடிகர் சூரியை நடிக்க வைக்க சுந்தர் சியிடம் பரிந்துரை செய்திருக்கிறார். அதுதான் சூரி நடித்த முதல் படம். அதன்பிறகு காதல் வின்னர் தீபாவளி போன்ற படங்களில் சில காட்சிகளில் சூரி இருந்திருப்பார்.
ஆனால் வெண்ணிலா கபடிக்குழு படம்தான் நடிகர் சூரியை பரோட்டா சூரியாக மாற்றியது. அதன்பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். இப்போது ஹீரோவாக ஜெயித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது மாமன் படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
ஆரம்பத்தில் நடிகர் சசிக்குமாருடன் சுந்தரபாண்டியன் பிரம்மன் கொம்பு வெச்ச சிங்கம்டா உடன்பிறப்போ உள்ளிட்ட சில படங்களில் நடிகர் சூரி காமெடி ரோலில் நடித்திருந்தார். கருடன் படத்தில் சூரி நாயகனாக நடித்திருந்த நிலையில் அந்த படத்தில் முக்கிய ரோலில் சசிக்குமாரும் நடித்திருந்தார். கருடன் படமும் மிகப்பெரிய வெற்றியை சூரிக்கு தந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படமாக உள்ளது. இந்த படம் இதுவரை 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. அதே போல் நடிகர் சூரி எழுதிய கதையில், அவரே நாயகனாக நடித்த மாமன் படமும் ரூ. 40 கோடி வரை இதுவரை வசூலித்துள்ளது. அதாவது டூரிஸ்ட் பேமிலி படத்தின் வசூலில் பாதியை தொட்டு விட்டது. வளர்ச்சின்னா இப்படி இருக்கணும் என்று ரசிகர்கள் சூரியை பாராட்டியுள்ளனர்.





