சமீபமாக வந்த விஜய் படங்களில், பாடல்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. லியோ படத்தில் வந்த நான் ரெடி தான் வரவா, பாடலை கூட பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் போக்கிரி, கில்லி, நண்பன், துப்பாக்கி, ஜில்லா பட பாடல்களை போல, இந்த பாடல் டிரண்டிங் ஆகவில்லை.
வாரிசு, மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்களின் பாடல்கள் கூட படம் ரிலீஸ் ஆனபோது கேட்கப்பட்ட அளவுக்கு பிறகு அவ்வளவாக ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடல்களாக அமையவில்லை. இசை மட்டுமே தூக்கலாக இருந்த சில பாடல்கள், விஜய் ரசிகர்களுக்கு ரிங் டோன்களாக வைத்துக்கொள்ள மட்டுமே நன்றாக இருந்தன.
இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்துவரும் விஜய், இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்பி இருக்கலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் விஜய் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதே வேளையில், இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்சங்கர் ராஜா அமைந்திருக்கிறார்.
சமீப காலமாக அனிரூத் இசை, தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படுகிறது. சமீபத்திய வெற்றி படங்களான ஜெயிலர், பதான், லியோ, விக்ரம் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் அனிரூத் என்ற நிலையில், தன்னுடைய இசையும் அதுபோல் பேசப்பட வேண்டும் என்ற முனைப்பில், விஜய் 68 படத்துக்கு இசையமைக்க திட்டமிட்டுள்ளார் யுவன்சங்கர் ராஜா. அதனால், இந்த படத்தின் இசை, பாடல்கள் வேற லெவலில் தரமானதாக இருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், விஜய் 68 படத்துக்கு பாடல் எழுத கவிஞர் மதன் கார்க்கி, களத்தில் இறங்குகிறார். ஏற்கனவே இவர் விஜய்க்கு நல்ல ஹிட் பாடல்களை கொடுத்தவர். நண்பன் படத்தில் அஸ்க்கு லஸ்க்கா, கத்தி படத்தில் செல்பி புள்ள, துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் போன்ற டிரண்டிங் பாடல்களை விஜய்க்கு தந்தவர்.
மேலும், கவிப்பேரரசு வைரமுத்து மகன்தான் மதன் கார்க்கி, தன் தந்தையை போலவே தானும் சிறந்த பாடல்களை தருவதில் புலிதான் என்பதை இந்த படத்திலும் நிரூபிக்க பேனாவுடன் காத்திருக்கிறார் மதன் கார்க்கி. அதனால், விஜய் 68 பாடல்கள் தரமாக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள். மொத்தத்தில் விஜய் 68, லியோ போன்ற ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தராது என்று நம்பலாம்.





