கடந்தாண்டில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து மதராஸி படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி படத்தில் ருக்மணி வசந்த் வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
தமிழில் ரஜினி நடித்த தர்பார் இந்தியில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் என 2 தோல்வி படங்களை அடுத்தடுத்து தந்த இயக்குனர் ஏஆர் முருகதாஸ், மதராஸி படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கஜினி கத்தி துப்பாக்கி சர்கார் ரமணா என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ். ஆனால் சமீபமாக அவரது சில படங்கள் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டன.
கடந்தாண்டில் தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் மற்றும் அமரன் ஆகிய 2 படங்களுமே பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. அதிலும் நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த அமரன் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த அமரன் படம் பாக்ஸ் ஆபிஸில் 325 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான 22 படங்களில் அதிக வசூல் செய்தது அமரன் படம்தான். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படம் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அமரன் படம் அபாரமான வெற்றியுடன் வசூல் சாதனை படைத்தும் இப்போது மதராஸி படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு வியாபாரம் இதுவரை நடக்காமல் இருப்பது கோலிவுட்டில் வட்டாரத்தில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமரன் படம் பெரிய அளவில் வசூல் செய்ததால் மதராஸி படத்தை அதிக விலை பேசுவதாக கூறப்படுகிறது. மிகப் பெரிய தொகை கொடுத்து மதராஸி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை வாங்க வினியோகஸ்தர்கள் மறுப்பதாக தெரிய வந்துள்ளது. ஏனென்றால் ஏஆர் முருகதாஸின் கடைசி 2 படங்கள் தர்பார், சிக்கந்தர் படுதோல்வி அடைந்ததால் மதராஸி படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் இல்லை.
அமரன் என்ற மெகா பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயனின் படம் மதராஸி, இன்னும் தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு வியாபாரம் ஆகாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக நட்சத்திர ஹீரோக்கள் படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்து வருகின்றன. அதிலும் ஏஆர் முருகதாஸ் படுமோசமான 2 தோல்வி படங்களை தந்தவர். அதனால் மதராஸி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்ற சந்தேகத்தில் படத்தை அதிக விலை கொடுத்து வாங்க வினியோகஸ்தர்கள் தயங்குகின்றனர்.





