தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித்குமார் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதன் முழு படப்பிடிப்பையும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடத்த அதன் இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது போக அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஆனால் இந்த தகவல்கள் எதையும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை. சூட்டிங் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட தகவலுமே இதுவரை வெளிவந்திருக்கிறது.
அண்மையில், படப்பிடிப்பின் போது அஜித் மற்றும் ஆரவ் இருவரும் கார் விபத்தில் சிக்கும் காட்சியையும் சுரேஷ் சந்திரா தான் வெளியிட்டார். இதைப் பார்த்துவிட்டு பதறிப் போன ரசிகர்கள், இனி அப்டேட்டே கேட்க வேண்டாம் என்ற நிலைக்குப் போய்விட்டனர்.
இப்படியான சூழலில், விடாமுயற்சியின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த இடைவேளையில், தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் அஜித் குமார். மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இதனை இயக்கி வருகிறார். படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் மூன்று கெட்டப்பக்களில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. இதன் முதல் போஸ்டரிலுமே படக்குழு இதை தான் தெரிவித்திருந்தது. இதில் அஜித்திற்கு ஜோடியாக, தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு யாரேனும் ஒருவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே வரும் வாரங்களில் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசி இருக்கும் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாக கூறியிருக்கிறார். விரைவில், மீதமுள்ள படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அஜித் பற்றி பேசியிருக்கும் அவர், அஜித் குமார் மிகவும் அர்ப்பணிப்பு கொண்ட நடிகர் என்றும், ஒரு காட்சி அவருக்கு பிடிக்கவில்லை என்றால் உடனடியாக மீண்டும் நடிப்பார் எனவும் தெரிவித்திருக்கிறார்.





