விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு, தளபதி விஜய் உடனான லியோ திரைப்படத்தை மிகவும் அவசர கதியில் எடுத்து முடித்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீடியோ உடன் வெளியானது. அப்போதே திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
சொன்ன தேதியில் நிச்சயம் படத்தை எடுக்க வேண்டும் என்பதால், காலில் ரெக்கை கட்டிக் கொண்டு ஓடினார் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலான காட்சிகள் ஜம்மு காஷ்மீரிலும், சில காட்சிகள், ஹைதராபாத்தில் ஷெட் போட்டும் எடுக்கப்பட்டன. வேலைகளை விறுவிறுப்பாக முடித்து, சொன்ன தேதியில் அவர் படத்தை இறக்கினார்.
அதற்கு முந்தைய திரைப்படமான விக்ரம், எல் சி யு என்னும் கான்செப்ட் உடன் சக்கை போடு போட்டதால், லியோ மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில், நரபலி பழிக்கு பழி என ரசிகர்கள் யூகிக்க முடியாத வகையில், சாதாரணமான வகையில் திரைக்கதை எழுதப்பட்டிருந்ததால் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் வசூலிலும் எந்த பாதிப்பையும் லியோ ஏற்படுத்தவில்லை.
இரண்டாம் பாதி நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கூறியதை, லோகேஷ் கனகராஜும் ஒப்புக்கொண்டார். இதனால் தனது அடுத்த திரைப்படமான கூலியை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் லோகேஷ். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு, அண்மையில் வெளியானது. அதை பார்க்கும்போது தங்க கடத்தலை மையமாக வைத்து படம் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையை மட்டும் ஆறு மாதங்களுக்கு மேலாக எழுதி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த முறை சொன்ன தேதியில் படத்தை எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படாமல், பொறுமையாக எடுத்தாலே போதும் என்ற முடிவில் அவர் இருக்கிறார். இதற்காக படப்பிடிப்பு தேதி கூட தள்ளி போனது. ரஜினியும், லோகேஷ் கனகராஜிடம் பொறுமையாகவே செல்லலாம் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் படத்திற்கான, சூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. கூலி படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் நடிப்பது உறுதியாக இருக்கிறது. கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் படப்பிடிப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கெட்டப்பில் நடித்த மாஸ்டர் மகேந்திரன், கூலியில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம், அடுத்த ஆண்டு வெளியாகிறது.





