தமிழ் சினிமாவை பொறுத்தவரை இப்போது 4 நடிகர்கள்தான் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் குமார் ஆகிய 4 பேரும்தான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிற நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் இவர்கள் படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெறும் படங்களாக இருக்கின்றன. அதனால் ரஜினி, கமல், விஜய், அஜீத் ஆகியோரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தாராளமாக முன் வருகின்றனர். அதேபோல் அவர்கள் நடிக்கும் கமர்சியல் படங்கள் பல நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளித் தருவதால் பெரிய பொருட்செலவில் அவர்களது படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதனால்பல நூறு பேர் தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், நடன கலைஞர்கள், தொழிலாளர்கள் என வேலை வாய்ப்பு பெறுகின்றனர். சமீபகாலமாக குறைந்த பட்ஜெட் படங்கள் தயாரிப்பு குறைந்து போய்விட்ட நிலையில், இவர்கள் நடிக்கும் பெரிய படங்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இவர்கள் மூலமாக மட்டுமே ஒரு படத்துக்கு ஆயிரம் பேருக்கும் மேல் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி, இனிமேல் அரசியல்தான், சினிமா வேண்டாம் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். தற்போது விஜய் நடிக்கும் 69வது படத்துடன் இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என்ற திட்டத்தில் இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், அவர் 73 வயதை கடந்த நிலையில் முதுமையால் சிரமப்படுகிறார்.
சமீபத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை நடந்து குறிப்பிடத்தக்கது. அதனால் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களை தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. ஒரு தரப்பினா், இனிமேல் ரஜினிகாந்த் கேமியோ ரோல்களில் மட்டும் நடித்துவிட்டு ஓய்வில் இருப்பதே நல்லது என்றும் கூறி வருகின்றனர். ஏனெனில் முதுமையான காலகட்டத்தில் அவர் அதிகளவில் சினிமாவில் நடித்து சிரமப்பட வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 70 வயதை தொடுகிற நிலையில், அவரும் இனி அதிக படங்களை நடிப்பது என்பது சாத்தியமில்லை. இதற்கிடையே நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்களை தொடர்ந்து ஓராண்டு வரை சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறார். கார் பந்தயங்களில் கலந்து கொள்வதற்காக அவர் ஓராண்டுக்கு மேல் சினிமாவை விட்டு விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி பெரிய நடிகர்கள் நடிப்பில் இருந்து விலகுவதால் தயாரிப்பாளர்கள் பெருத்த பாதிப்பை சந்திப்பார்கள். மேலும் சினிமா தயாரிப்பும் பாதிக்கப்பட்டு, பல நூறு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.





