கதையின் மையக்கருவும், அதைச்சுற்றி பின்னப்படும் திரைக்கதையும், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தும் பக்குவப்பட்ட நடிகர், நடிகைகளும், படத்தின் ஒளிப்பதிவும், இசையும் எல்லாவற்றையும் விட இயக்குநர் கதை சொல்லும் விதமும் ரசிகர்களை கவர்ந்துவிட்டால் அது சக்சஸ் படம்தான்.
சமீபத்தில் வெளிவந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் காதல் தி கோர். ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டி, ஜோதிகா நடித்துள்ள இந்த படம், ஓரினச் சேர்க்கை மனிதர்களை பற்றிய கதைதான் என்றாலும், படத்தை பார்த்த பலரும், படம் குறித்து நேர்மறையான கருத்துகளை, விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இதே போன்ற கதையம்சத்தில் நான் எடுத்த படத்துக்காக என் மீது கல் எறிந்தார்களே என மலையாள இயக்குநர் எம்.பி பத்மக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மலையாள பட இயக்குநர் மற்றும் நடிகர் எம்.பி பத்மக்குமார் கூறியதாவது, கடந்த 2014ம் ஆண்டில் மை லைப் பார்ட்னர் என்ற படத்தை நான் இயக்கினேன். இந்த படத்தில் மலையாள நடிகர் சுதேவ் நாயர் என்பவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருதும் கிடைத்தது. இந்த படத்தில் அந்தளவுக்கு அவர் சிறப்பாக நடித்திருந்தார்.
ஏறக்குறைய காதல் தி கோர் படத்தின் கதையை தான் அந்த படமும் கொண்டிருந்தது. இந்த வித்யாசமான கதையை படமாக்க தயாரிப்பாளர் ஒருவர் முன்வந்தார். ஆனால் அந்த படத்தை பலரும் விரும்பவில்லை. குறிப்பாக தியேட்டர்காரர்கள் அந்த படத்தை திரையிட முன்வரவில்லை. அப்படியே தியேட்டர்களில் திரையிட்டாலும், ஓரிரு தினங்களில் வேறு படங்களை மாற்றி விட்டனர்.
இதற்கு முக்கிய காரணம், அந்த படத்தில் பிரபல நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை. இந்த படம் குறித்து எதிர்மறை விமர்சனங்களே அதிகளவில் வந்தன. தியேட்டர்களில் படம் ஓடாததால் ஆன்லைன் சேனலுக்கு அந்த படத்தை, தயாரிப்பாளர் விற்றார். ஆனால், அதிலும் அந்த படத்தை துண்டு துண்டாக வெட்டி காட்டி, அந்த சானல் லாபம் சம்பாதித்தது.
இன்று காதல் தி கோர் படத்தை பாராட்டுகிற இந்த சமூகம், அன்று என் படம் மீது கல் எறிந்தது. ஆனால் அதே கருத்தை அடிப்படையாக கொண்டு வந்துள்ள மம்முட்டி, ஜோதிகா நடித்த படத்தை பாராட்டி வரவேற்கிறது. அதுவும் எனக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. அன்று இதே கருத்தை புறக்கணித்த ரசிகர்கள், இன்று ஏற்றுக்கொள்ள முன்வந்தார்களே என்பதும் சந்தோஷத்தை தான் தருகிறது என்று கூறியிருக்கிறார் நடிகர், இயக்குநர் எம்.பி பத்மகுமார்.





