தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் இயக்குனர் எஸ் யூ அருண்குமார். இவர் எடுத்த குறும்படத்தையே வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து அதன் மூலம் தன்னை இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டார்.
அப்படி அவர் எடுத்த திரைப்படம் தான் பண்ணையாரும் பத்மினியும். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த அந்த திரைப்படம், முதிய தம்பதியரின் எதார்த்தமான காதலையும், ஒரு காரின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பையும் மிக அழகாக காட்டியது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி திரைப்படத்தை எடுத்தார் அருண்குமார். முதல்முறையாக முறுக்கிய மீசையுடன் போலீஸ் கெட்டப்பில் நடித்த விஜய் சேதுபதி, தனது ஒவ்வொரு அசைவிலும் மிரட்டினார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த அருண்குமார் சிந்துபாத் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு இயக்கத்திற்கு சிறிது விடுமுறை விட்டு இருந்த அவர், சித்தார்த்தை வைத்து சித்தா திரைப்படத்தை எடுத்தார்.
தமிழ் சினிமாவில் எளிமையாக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தில் கதை அம்சம் சரியாக இருந்தால் அது எப்படி என்றாலும் ஹிட் அடித்து விடும் என்பதற்கு சித்தா ஒரு உதாரணம் என்று கூறலாம். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி வெளியான அந்த திரைப்படம், எதிர்பார்க்காத அளவிற்கு வசன ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது
இப்படியான சூழலில் தற்போது அருண்குமார் அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து இருக்கிறார். விக்ரமின் 62 ஆவது திரைப்படமாக உருவாகும் இதில், ஏற்கனவே எஸ் ஜே சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்தப் படத்தில், மலையாள நடிகர் சூரஜ்ஜூம் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கும் சூரஜ், மலையாளத்தில் பெரும்பாலான திரைப்படங்களின் நடித்து முக்கிய நடிகராக வலம் வருகிறார். அவர் விக்ரம் திரைப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.





