நடிகர் சூரி நாயகனாக நடித்த 5வது படம் மாமன். விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி படங்களை அடுத்து சூரியின் நடிப்பில் வெளியான மாமன் படம் கடந்த 16ம் தேதி வெளியானது. கடந்த 11 நாட்களில் அதாவது நேற்று 26ம் தேதி வரை மாமன் படம் 32 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது.
தாய் மாமன் உறவை மையப்படுத்திய குடும்பக் கதையாக உருவான மாமன் படத்தில் நாயகனாக சூரி நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தனர். மேலும் ராஜ்கிரண் லப்பர் பந்து நடிகை சுவாசிகா பாபா சங்கர் பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். படத்தை பிரசாந்த் பாண்டியராஜன் டைரக்ட் செய்திருக்கிறார்.
மாமன் படம் வெளியான நாளில் இருந்தே இந்த படத்துக்கு பேமிலி ஆடியன்ஸ் ஆதரவு பெரிய அளவில் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் கதையை இதுவரை நான் பார்த்த குடும்பங்களில் இருந்து எடுத்து உருவாக்கியதாக படத்தின் கதை ஆசிரியர் நடிகர் சூரி கூறியிருக்கிறார். மேலும் மாமன் படம் பிரமோசனுக்காக ஊர் ஊராக தியேட்டர்களுக்கு நடிகர் சூரி விசிட் அடித்தார்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியதாவது, உண்மையில் ஆரம்பத்தில் மாமன் படத்திற்கு மீடியாவில் கலவையான விமர்சனங்களை வந்தன. படத்தில் சென்டிமென்ட் அதிகமாக உள்ளது என்றார்கள். ஆனால் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் படத்தை நன்றாக பிரமோட் செய்தார் சூரி.
ஒவ்வொரு ஊராக போய் ரசிகர்களை சந்தித்து நடிகர் சூரி பேசினார். நல்ல படம் எடுத்திருக்கிறோம், வந்து பாருங்கள் என்றார். அதனால் சூரியை நம்பிய மக்கள், மாமன் படத்தில் ஏதோ இருக்கிறது என்று நம்பி வந்தார்கள். படமும் இப்போது ஹிட் ஆகிவிட்டது என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியிருக்கிறார்.
ஹீரோவாக கதை ஆசிரியாக தனது பணியை நிறைவாக செய்துவிட்ட நடிகர் சூரி இப்போது தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். வரும் ஜூன் முதல் வாரத்தில் அவர் சென்னைக்கு திரும்பி வந்தவுடன், படத்தின் வெற்றி விழா நடக்க உள்ளது. டூரிஸ்ட் பேமிலியை தொடர்ந்து மாமன் படமும் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் கதைக்காகவே ஓடியது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.





