நடப்பாண்டு மலையாளத் திரைப்படங்களுக்கு என தமிழ் சினிமாவில் தனி மவுசு எகிற தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டின் தொடக்க காலங்களில், நல்ல தமிழ் படங்கள் அமையாமல் போனதுதான். அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் என வெளியான எந்த திரைப்படங்களும் சரியாகப் போகவில்லை.
இந்த சமயத்தில்தான், மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்தின் கதை தமிழ்நாட்டின் கொடைக்கானலில் அமைவது போல் இருந்ததால் அது ரசிகர்களுக்கு மிக எளிதாக கனெக்ட் ஆனது. படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது தமிழ் ரசிகர்களுக்கு புரியும் வகையில் இருந்ததும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்.
இந்த வரிசையில் பிரேமலு திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இது நேரடியாக மலையாள படமாக வரவில்லை. தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், பிரேமலுவை பலரும் கொண்டாட ஆரம்பித்தனர். குறிப்பாக அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது அவர் புதிதாக விஷ்ணு விஷால் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நம்பகமான நடிகர்களில் விஷ்ணு விஷாலும் ஒருவர். எப்படியும், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாபெரும் வெற்றியை கொடுத்து அவர் தனது இருப்பிடத்தை தக்க வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் சக்கை போடு போட்டன.
இந்த நிலையில் தற்போது இந்த படங்களின் இயக்குனர் ராம்குமார் உடன் தான் மீண்டும் விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார். ரொமான்டிக் காதல் படமாக இது உருவாகி வருகிறது. கொடைக்கானலில் இதற்கான சூட்டிங்கை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்திருக்கிறது.
ஜிவி பிரகாஷ் நடித்த ரீபெல் திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் மமிதா அறிமுகமானார். தொடர்ந்து அவர் பிரதிப் ரங்கநாதன் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முரளி மகன் அதர்வா கூடவும் மமிதா ஜோடி செய்கிறார். ஒரே நேரத்தில் அவர் மூன்று திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் நிச்சயம் அவருக்கு இவை கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





