மம்மூட்டி மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தாலும் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் மம்மூட்டிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
1980களில் இருந்தே மம்மூட்டி தமிழ் சினிமா உலகில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். “மௌனம் சம்மதம்”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
அந்த வரிசையில் மம்மூட்டி நடித்த “ஆனந்தம்” திரைப்படம் அவரது கெரியரில் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் மம்மூட்டியுடன், முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றிய பிருந்தா சாரதி, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது மம்மூட்டி கோபித்துக்கொண்டு வெளியேறியது குறித்தான ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது இத்திரைப்படத்தில் மம்மூட்டி கதாபாத்திரம், “முதல் காதலை மறக்கவே முடியாது. மனசுக்குள்ள பட்டாம்பூச்சி மாதிரி படபடன்னு பறந்துகிட்டே இருக்கும்” என்று பேசுவது போல் ஒரு வசனம் இருந்ததாம். ஆனால் மம்மூட்டியோ, “இந்த வசனம் 20 வயது கதாபாத்திரம் பேசினால்தான் நன்றாக இருக்கும், இதனை நான் பேசினால் நன்றாக இருக்காது” என்று கூறினாராம்.
எனினும் லிங்குசாமி மம்மூட்டியை இந்த வசனத்தை பேசுவதற்கு சம்மதிக்க வைக்க முயன்றும் அவர் தோற்றுப்போனாராம். அப்போது பிருந்தா சாரதி, மம்மூட்டியிடம் சென்று “இந்த காட்சிக்கு பிறகு ஒரு காட்சி வருகிறது. அதாவது இரவில் நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது தேவயானியின் விசும்பல் சத்தம் கேட்கிறது. நீங்கள் என்ன என்று கேட்க, தேவயானியோ, ‘இன்னும் அந்த நினைப்பு உங்க மனசுல இருக்குல, எனக்குன்னு ஒரு குழந்தை பிறந்திருந்தா இந்த நினைப்பு போயிருக்கும்’ என்று அழுதுகொண்டே கூறுவார்.
இந்த காட்சிகாகத்தான் அந்த வசனத்தை வைக்கிறோம்” என கூறி மம்மூட்டிக்கு புரியவைத்தாராம். மம்மூட்டியோ, “ஆனால் டைரக்டர் இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லலையே” என்று கோபப்பட்டாராம். அதன் பிறகுதான் இந்த வசனத்தை பேச ஒப்புக்கொண்டாராம். ஆனால் கடைசி வரை தேவயானி அழுவது போல் உள்ள காட்சியை படமாக்க முடியவில்லையாம்.





