இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாக பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். ரஜினிகாந்த் ரம்யாகிருஷ்ணன் யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி வசந்த் ரவி சரவணன் அறந்தாங்கி நிஷா விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
மேலும் மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் சுனில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். மேலும் காவலய்யா பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம் ஜெயிலர் படத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த மிகப்பெரிய மற்றொரு பலம் வில்லன் நடிகர் விநாயகன்தான். சிலை கடத்தல் மன்னன் கேரக்டரில் அவரது வில்லன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. எந்தா சாரே மனசிலாயோ… என்ற கிண்டலான வசனத்தில் மொத்த கைதட்டலையும் பெற்றது ஜெயிலர் படத்தில் வில்லன் கேரக்டரில் வருமனாக வந்த விநாயகன்தான்.
ஆனால் இந்த படத்தில் முதலில் வில்லன் கேரக்டரில் நடிக்க இருந்தது வேறொரு பிரபல நடிகர்தான். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க வேறு ஒரு பிரபல ஹீரோவை தான் அழைத்தோம். அவர் எனது நெருங்கிய நண்பர். அதே நேரத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால் சில சங்கடங்கள் ஏற்படும் என்பதை இருவருமே உணர்ந்ததால் அதற்கு பதிலாக விநாயகனை வில்லன் கேரக்டருக்கு தேர்வு செய்ததாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் குறிப்பிட்டு சொன்ன அந்த நடிகர் சிரஞ்சீவியா மம்முட்டியா மோகன்லாலா என குழப்பம் நீடித்து வந்த நிலையில், அது நடிகர் மம்முட்டிதான் என்பது இப்போது தெளிவாகி உள்ளது. விநாயகன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் மம்முட்டிதான். அதன்பிறகுதான் மம்முட்டியை நிராகரித்துவிட்டு அந்த கேரக்டரில் விநாயகனை இயக்குனர் நெல்சன் நடிக்க வைத்திருக்கிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த நடிகர் வசந்த் ரவி ஒரு நேர்காணலில் பேசுகையில், விநாயகன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது மலையாள நடிகர் மம்முட்டிதான் என்று தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் மம்முட்டியே நடித்திருந்தாலும் விநாயகன் அளவுக்கு ரசிகர்களை மிரட்டி இருப்பாரா என்பதும் சந்தேகம்தான். அதே நேரத்தில் தளபதி படத்துக்கு பிறகு ரஜினி மம்முட்டி இணைந்து நடிக்காத நிலையில், இனி வரும் காலத்திலாவது இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





