நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். சுருக்கமாக தி கோட் என அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகிறது. போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன.
விஜய் ஏற்கனவே தி கோட் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்ட நிலையில் இப்போது படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளுக்கான டப்பிங் பேசும் பணிகள் நடந்து வருகின்றன. சினேகாவுக்கான டப்பிங் பணியை, மொபைல் டப்பிங் மூலம், டப்பிங் கலைஞர் சவீதா, அமெரிக்காவில் இருந்தபடியே பேசி முடித்துள்ளார்.
தி கோட் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்துக்கான பின்னணி இசை கோர்ப்பு பணியை இரு தினங்களுக்கு முன்பு, படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா துவங்கி விட்டார். இதை, இயக்குனர் வெங்கட்பிரபு புகைப்படத்துடன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது வைரலானது.
எனினும் தி கோட் படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிய கூடுதல் கால அவகாசம் தேவை என்பதால், இன்னும் சில வாரங்களோ, ஓரிரு மாதமோ கழித்துதான் தி கோட் படம் வெளியாகும் என்ற ஒரு தகவல் சில தினங்களாக பரவி வருகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை, குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தி கோட் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தி கோட் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் என்ற தகவல் உண்மையில்லை. 24 மணி நேரமும் இந்த படத்துக்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம். தவறான, எதிர்மறையான செய்தியை யாரும் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், ஏற்கனவே திட்டமிட்டு அறிவித்தபடி உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி தி கோட் படத்தை வெளியிடுவோம். வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல், தி கோட் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். அதனால் தி கோட் படம் ரிலீஸ் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





