நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படம் படுதோல்வி அடைந்தது. அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த அவரது 44வது படம் ரெட்ரோ. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளது.
தற்போது நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடிக்கிறார். நாயகியாக திரிஷா நடிக்கிறார். நெடுஞ்சாலை கருடன் படங்களில் நடித்த ஷிவதா, லப்பர் பந்து நடிகை சுவாசிகா மற்றும் நட்டி யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங், சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் ஷெட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமீர் நடிக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இந்த படத்தில், உள்ளூர் அரசியலையும் கலந்து திரைக்கதை அமைத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இதில் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு குறித்த சில காட்சிகளும் கதையுடன் கலந்து வருவதாக கூறப்படுகிறது. விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் வாடிவாசல் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, மலையாள பட நடிகர் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். ஏற்கனவே சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா, நடிகர் மம்முட்டியுடன் காதல் தி கோர் என்ற படத்தில் நடித்திருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
அப்போதே நடிகர் மம்முட்டியுடன் நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது பசில் ஜோசப் இயக்கும் படத்தை, மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டியே தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்திருக்கிறார். மம்முட்டி தயாரிக்கும் படத்தில் பசில் ஜோசப் இயக்கத்தில் சூர்யா நடிப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பசில் ஜோசப் சிறந்த நடிகர், பெரிய இயக்குனராக மலையாள திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.





