சமீபத்தில் வெளியான மலையாள படம் மஞ்சம்மேல் பாய்ஸ். இந்த படத்தில் நடித்த தமிழ் நடிகர்கள் ஓரிருவர் தவிர மற்றவர்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியாது. சதுரங்க வேட்டையில் நடித்திருந்த திலகனை, கைதி, லியோ படங்களில் நடித்த ஜான்சன் ஆகியோர் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான முகங்கள்.
மற்றபடி படத்தில் காணப்படும் அந்த மஞ்சும்மேல் பாய்ஸ் உட்பட அனைவருமே புதுமுகங்கள்தான். இதற்கு முன்பு ரசிகர்கள் அவர்களை பார்த்ததே கிடையாது. ஆனால் அந்த படம் 75 கோடி ரூபாயை தாண்டி வசூலில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 5 கோடிதான் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இன்னும் சில தினங்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டிவிடும் என்றும் நம்பப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் இதுவரை மஞ்சும்மேல் பாய்ஸ் 17 கோடி ரூபாயை வசூலில் கடந்துள்ளதாகவும். இது ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படத்தை விட அதிகம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் அபார வெற்றிக்கு காரணம், படத்தின் கதை, கதை மட்டும்தான். அதுவும் 2006ம் ஆண்டில் நடந்த உண்மை கதை. குகை சுரங்கத்தில் விழுந்த நண்பனை, மற்றொரு நண்பனே ரிஸ்க் எடுத்து காப்பாற்றும் ஒரு வரி கதைதான்.
ஆனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஜெயித்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். எந்த வலைதள பக்கத்தை புரட்டினாலும், கண்மணி அன்போடு பாடல்தான் திரும்ப திரும்ப ஒலிக்கிறது. மஞ்சும்மேல் பாய்ஸ் போடும் கொண்டாட்ட காட்சிகள்தான் திரையில் தெரிகிறது. இப்படி இந்த மாபெரும் வெற்றியடைந்த நிலையில், மற்றொரு விஷயமும் இதில் ஒளிந்துள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியும் இல்லை படத்தின் கதைப்படி மஞ்சும்மேல் பாய்ஸ் குரூப்பில் உள்ள அனைவருமே கதாநாயகன்தான். ஆனால் கதாநாயகி இல்லாத படம் என்ற உணர்வே, இந்த படத்தை பார்க்கும்போது எந்த ரசிகர்களுக்கும் ஏற்படவில்லை. அப்படி என்றால், கதைக்கு அவசியம் என்றால் கதாநாயகி வரலாம். இல்லை என்றதால் கதையே, நாயகி இல்லாத குறையை நிவர்த்தி செய்யும்.
ஆனால் நம் தமிழ் சினிமாவில் கதையை நம்பாமல், கதாநாயகனையும், சதையை நம்பி அழகான கதாநாயகியையும் காட்டி ரசிகர்களை ஏமாற்றும் கைவந்த கலைதான் இயக்குனர்களிடம் இருக்கிறது. அஜீத், விஜய்க்கு ஈடுகொடுக்க வேண்டும் என்பதற்காக ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்களும் இப்போது மசாலா படங்களில் நடிப்பதும், பில்டப் செய்து கொள்வதும் பார்க்கும்போது, மோகன்லால் மம்முட்டி போன்றவர்களை பார்த்தாவது திருந்துங்கள் என்று உரக்கமாக கத்த தான் ரசிகர்களுக்கு தோன்றுகிறது. இனியாவது அவர்கள் திருந்தினால்தான், தமிழ் சினிமா உருப்படும். நெல்சன், லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் போன்றவர்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்க முடியும்.





