- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவுக்கு பாடம் நடத்திய ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ - இனியாவது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் திருந்துவார்களா?

தமிழ் சினிமாவுக்கு பாடம் நடத்திய ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ – இனியாவது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் திருந்துவார்களா?

- Advertisement -

தரமான கதை இருந்தால், சிறப்பான கருத்து இருந்தால் அதற்கு மொழி ஒரு தடை இல்லை. அந்த படங்களை வரவேற்றுக் கொண்டாடுவோம் என, தமிழ் சினிமா ரசிகர்கள் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை அமோக வெற்றி பெறச் செய்து நிரூபித்திருக்கின்றனர். ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், கடந்த பிப்ரவரி 22ல் வெளியானது. இப்போது உலக அளவில் ரூ. 100 கோடி வசூலை நோக்கி மிக வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறது.

ரஜினி, கமல், விஜய், அஜீத் என நட்சத்திர நடிகர்களை நம்பி, கதையை இரண்டாம்பட்சம் ஆக்கிவிட்டு, ஹீரோயிசத்தை நம்பி, நடிகர்களுக்காக கதை செய்யும் இயக்குநர்களுக்கு சம்மட்டி அடியாக புத்தி புகட்டியுள்ள மஞ்சும்மேல் பாய்ஸ். நல்ல கதை இருந்தால் போதும், ரசிகர்களே அந்த படத்தை வெற்றி பெறச் செய்வார்கள் என்பதற்கு மஞ்சும்மேல் பாய்ஸ் சிறந்த உதாரணம்.

- Advertisement -

சமீபத்தில், லால் சலாம் படம் பிளாப் ஆனதுக்கு காரணம், படத்தை சரியாக பிரமோ செய்யவில்லை என்று படத்தை தயாரித்த லைகா நிறுவனம் மீது பழிபோட்டார் படத்தின் டைரக்டர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் ரஜினி பங்கேற்ற இசை வெளியீட்டு விழா, ஏகப்பட்ட விளம்பரங்கள் இந்த படத்துக்கு செய்யப்பட்டது. ரஜினியே நடித்திருந்தாலும் படம் பிடித்திருந்தால் தானே, ரசிகர்கள் பார்க்க வருவார்கள், என்பதை ஐஸ்வர்யா புரிந்துக்கொள்ளவில்லை.

ஆனால் மஞ்சும்மேல் படத்துக்கு யாரும் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யவில்லை. எந்த பெரிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கவில்லை. 2006ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம், நண்பர்களுடன் சென்ற ஒருவர், குகைக்குள் உள்ள அதலபாதாள சுரங்கத்துக்குள் தவறி விழுந்து விடுகிறார். அவரை, அவரது நண்பரே கயிறு கட்டி இறங்கிச் சென்று மீட்டு மேலே கொண்டு வருகிறார். இந்த இரண்டு வரி கதைதான், 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி இப்போது சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

கேரளா, எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் நண்பர்கள் கொடைக்கானல் வரும் பயண காட்சிகள், பழனிமலை, கொடைக்கானில் குணா குகை, தவறி விழும் நண்பர், காப்பாற்ற முடியாமல் அவர்களின் போராட்டம், போலீசார் அலட்சியம், சுரங்கத்துக்குள் நண்பனை மீட்டு வரும் நண்பன், கயிறு கட்டி இழுக்கும் நண்பர்கள் என பலவிதங்களில் அந்த படம், வெகு யதார்த்தமாக இருப்பதே படத்தின் அபார வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

இதற்கு மிக அழகாக, கமல்ஹாசனின் பாடல் வரிகளை பயன்படுத்தி இயக்குநரின் சாமார்த்தியம், தமிழ் சினிமா ரசிகர்களை இன்னும் பலமடங்கு உணர்ச்சிவசப்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட படங்களை இயக்க மணிரத்னம், ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன், சிறுத்தை சிவா, ஏஆர் முருகதாஸ், கவுதம் மேனன் போன்ற இயக்குநர்கள் முன் வந்தால், தமிழ்சினிமாவுக்கு அது பொற்காலமாக இருக்கும். அதைதான் தமிழ் சினிமா ரசிகர்களும் விரும்புகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு அதைதான் படமாக வந்து, பாடமாக சொல்லியிருக்கிறது மஞ்சும்மேல் பாய்ஸ். இனியாவது தமிழ் சினிமா திருந்துமா?

- Advertisement -

சற்று முன்