நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருந்தவர். இப்போது அவர் விட்டுச் சென்ற அவரது இடம் காலியாகதான் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஏனெனில் நடிப்பில் மட்டுமின்றி ஒரு திரைக்கலைஞராக அவர் பல விஷயங்களை செய்து காட்டியவர். பல விஷயங்களில் மாற்றத்தை கொண்டு வந்தவர்.
குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த நடிகர் சங்க கடனை அடைத்தவர். இதற்கான ரஜினி, கமல் போன்றவர்களை எல்லாம் துபாய், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அழைத்துச் சென்று கலை நட்சத்திர இரவு நடத்தியவர்.
இப்போதைய நடிகர், நடிகைகளை ஒருங்கிணைத்து அப்படி ஒரு கலைவிழா, வெளிநாடுகளில் நடத்துவது என்பது இப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகளால், மூத்த நடிகர்களால் முடியாத காரியம். ரஜினி, கமல் ஆசைப்பட்டால் கூட அப்படி ஒரு கட்டுக்கோப்பான நடவடிக்கையை எடுக்க முடியாது என்பதே கசப்பான உண்மை.
அதுமட்டுமின்றி சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில், பெரிய நடிகர் முதல் லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே விதமான சாப்பாடு, அதுவும் தரமான சைவம், அசைவம் சாப்பாடு என கொண்டு வந்தவரும் விஜயகாந்த் தான். அவரது ஷூட்டிங் ஸ்பாட்டில் அது தவறாது நடக்கும். அந்த வழக்கத்துக்காக தயாரிப்பாளர் அதிக செலவாக கருதினால், அது எத்தனை லட்சம் என்றால், தன் சம்பளத்தில் பிடித்துக்கொள்ள சொல்லும் குணம் கொண்டவர் கேப்டன்.
இப்படி சினிமாவில் முதன்மை பெற்ற பண்பாளராக இருந்த அவர், தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கி, அதிலும் பல சாதனைகளை படைத்தார். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார். ஆனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அரசியலில், சினிமாவில் என இரண்டிலுமே அவரால் செயல்பட முடியாமல் போனது. கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் மூலம் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். அதன்பின்பே அவர் பிரபல நடிகராக மாறினார். சமீபத்தில் விஜயகாந்த் குறித்து பேசிய அவர், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அவரை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது கேப்டன் பிரபாகரன் 2ல் நீங்கள் நடிக்க வேண்டும். நானும் உங்களுடன் நடிக்க வேண்டும் என்றேன். முதலில் சிரித்த அவர், அடுத்த சில விநாடிகளில் அழுதுவிட்டார். அவரால் பேச முடியவில்லை. நன்றாக இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என கடைசி வரை சொல்லி, அவரது உடல்நலத்தை கவனிக்காமல் விட்டுவிட்டனர் என்று மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.





