தமிழ் சினிமாவில் சாதிய அடக்குமுறைகளையும், சமூகத்தின் நிலவும் சாதிய மனப்பான்மையையும் தோலுரித்து காட்டிய இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் உதவியாளராக பணிபுரிந்த அவர், பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா ரஞ்சித் தயாரித்தார்.
தமிழ் சினிமாவில் இதுவரை தொடாத கதை களத்தை துணிந்து இயக்கிய மாரி செல்வராஜ், அந்த ஒரு திரைப்படத்தின் மூலம் பலரையும் கவர்ந்தார். வித்தியாசமான கதை களத்துடன், சாதிய ஏற்ற இறக்கத்தை காண்பித்த இந்த திரைப்படத்தை ரசிகர்கள் வரவேற்றனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் எடுத்தார்.
முந்தைய திரைப்படத்தில் ஒரு இளைஞனை சுற்றி நடக்கும் சாதிய ஒடுக்கு முறையை காண்பித்த இயக்குனர் மாரி செல்வராஜ், கர்ணனின் பேருந்து அரசியலையும் அதனைச் சுற்றி நடக்கும் ஒடுக்கு முறையையும் காட்டியிருந்தார். பரியேறும் பெருமாளின் வன்முறையில் இருந்து கதாநாயகன் ஒதுங்கியிருக்க கர்ணனிலோ, வாளெடுத்து கையில் கொடுத்திருந்தார் மாரி செல்வராஜ்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு மாமன்னன் படம் வெளியானது. இதில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் நாற்காலி அரசியலை மாரி செல்வராஜ் பேசியிருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தின் விமர்சன ரீதியாக பார்க்கும் போது முந்தைய திரைப்படங்களை விட சற்று கொஞ்சம் சுமாராகவே இருந்தது என்றே கூறலாம்.
குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி, முழுக்க முழுக்க சினிமா தனமாகவே இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். இருப்பினும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படியான சிறுவர்களை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து வாழை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து அவர் படம் எடுக்க இருக்கிறார். ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சூட்டிங் தள்ளிப்போன நிலையில், அடுத்த மாதம் அதற்கான பணிகள் தொடங்குகிறது. மணத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையில் மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. படத்திற்காக மணத்தி மைந்தன் என்னும் டைட்டிலை அவர் வைத்திருக்கிறாராம். பா ரஞ்சித் இந்த திரைப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.





