மாரி செல்வராஜ் தற்போது பைசன் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாள நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரஸிஜா விஜயன் ஆகியோர் இதில் நடிக்கின்றனர்.
இதுபோக பசுபதி, லால், கலையரசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளது. இதற்கு முன்னதாக சந்தோஷ் நாராயணன் மற்றும் ஏ ஆர் ரகுமானுடன் சேர்ந்து பணிபுரிந்த மாரி செல்வராஜ் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுடன் இணைந்திருக்கிறார். கபடியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக எடுத்து தனக்கு ஏற்றபடி மாற்றி, மாரி செல்வராஜ் இதனை எடுத்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பைசன் படத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் வரும் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்தன. இதில் கலையரசன் நிகிலா விமல் திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார். முதலில் அவர் தனுசுடன் இணைய இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பு கடந்த காலங்களிலேயே வெளியானது. தனது கனவு கதையை தான் மாரி செல்வராஜ் இதில் எடுப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், இது குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது வேலை பிடித்திருக்கிறது. அவரிடம் நான் ஒரு கதையை கூறி இருக்கிறேன்.
அது மட்டுமல்ல தளபதி விஜய்யை சந்தித்தும் ஒரு முறை கதை கூறினேன். மூன்றாவது முறையாக சந்தித்து அதனை அவரிடம் பேசியபோது விஜய்க்கு பிடித்திருந்தது. ஆனால் அவரது 69 வது திரைப்படம் கடைசி படமாக இருக்குமானால் இது மேற்கொண்டு செல்லாது. அடுத்ததாக தனுசுடன் ஒரு படத்தை எடுக்க இருக்கிறேன். பிறகு கார்த்தியை வைத்து இயக்க உள்ளேன். இந்த இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் நான் இணையும் படம் உறுதியாகும் என்று எதிர்பார்க்கிறேன் என மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.





