தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிலம்பரசன் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 48 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிம்பு சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் “காதல் அழிவதில்லை”. அதன் பின் “தம்”, “அலை”, “கோவில்” போன்ற பல ஹிட் படங்களில் நடித்த சிம்பு, இளம் பெண்களின் கனகவுக்கண்ணனாகவே விளங்கினார்.

சிம்பு நடித்த “மன்மதன்”, “வல்லவன்” ஆகிய திரைப்படங்கள் இப்போதும் அவரது கெரியரின் மிக முக்கியமான திரைப்படங்களாக விளங்குகிறது. இந்த நிலையில் “மன்மதன்” திரைப்படத்தில் தான் பணியாற்றியது குறித்தும், சிம்புவுக்கும் தனக்கும் நடந்த பிரச்சனையை குறித்தும் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகர் ஜி.மாரிமுத்து.
நடிகர் ஜி.மாரிமுத்து தற்போது இணையத்தில் மிக டிரெண்டிங்காக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “எதிர் நீச்சல்” தொடரில் அவர் ஏற்று நடித்து வரும் குணசேகரன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமான கதாபாத்திரமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர் அந்த தொடரில் பேசக்கூடிய வசனங்கள் பலவும் வைரலாகின்றது.

ஜி.மாரிமுத்து தொடக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான், வசந்த் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மேலும் “கண்ணும் கண்ணும்”, “புலிவால்” போன்ற திரைப்படங்களையும் இயக்கியவர். இவர் சிலம்பரசன் நடித்த “மன்மதன்” திரைப்படத்திலும் பணியாற்றியிருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் “மன்மதன்” திரைப்படத்தில் பணியாற்றியது குறித்தான ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“மன்மதன் படத்தில் என்னுடைய பங்கு அதிகம். நீங்கள் கேமராவை ஆஃப் செய்தால் நான் நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்வேன்” என கூறிய அவர், “ஒரு முறை சிம்புவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது மன்மதன் என்ற படத்தை உருவாக்கி வருவதாகவும் அதில் படக்குழுவினர் பலவீனமாக இருப்பதாகவும் கூறினார். மன்மதன் திரைப்படத்தில் பணியாற்ற முடியுமா என்று என்னிடம் கேட்டார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். அதன் பின் அந்த படம் கிட்டத்தட்ட 3 வருடங்கள் உருவாகியது. பல தொழில்நுட்ப கலைஞர்கள் மாறி மாறி வேலை பார்த்தனர்.

நான் அந்த படத்தில் மிகவும் உன்னிப்பாக வேலை பார்த்தேன். என்னுடைய பங்களிப்பு என்பது பெரும் பங்களிப்பு. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு சிம்புவுக்கும் எனக்கு ஒரு சிறு உரசல் ஏற்பட்டது. ஆதலால் நான் வெளியேறிவிட்டேன்” என கூறியுள்ளார்.





