இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷா நடித்த படம் லியோ. இந்த படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி பெரிய அளவில் வசூலை குவித்தது. இந்த படத்தில் நான் ரெடிதான் வரவா என்ற விஜய் டான்ஸ் ஆடிய பாடல் மிகப்பெரிய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் காட்சிக்கு நடன இயக்குனராக டான்ஸ் மாஸ்டர் தினேஷ் பணிபுரிந்திருக்கிறார்.
இந்த பாடல் காட்சியில் 1000க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி இருந்தனர். ஆனால் அதில் நடன கலைஞர்கள் பல நூறு பேருக்கு சரியாக சம்பளம் போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. பலரும் அவர்களுக்காக நியாயம் கேட்ட நிலையில் அந்த பிரச்னை பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆனது. ஆனால் அவர்களுக்கான சம்பளம் போய் சேரவில்லை.
அந்த பாடல் காட்சிக்கான சம்பளத்தில் 35 லட்சம் ரூபாய் மோசடி செய்து, நடன கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக நடன இயக்குனர் சங்கத்தின் தலைவர் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக தினேஷ் இருந்து வருகிறார். இந்த பிரச்னையில் கனடாவில் வசிக்கும் நடன இயக்குனரான கௌரிசங்கர் என்பவரை தாக்கியதாகவும் தினேஷ் மாஸ்டர் மீது ஒரு புகார் இருக்கிறது.
மேலும் நடன இயக்குனர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த நடன இயக்குனர் மாரி என்பவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கௌரிசங்கர் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கனடாவில் இருந்து சங்கத்திற்கு வந்த கௌரிசங்கரை தினேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த குற்றச்சாட்டுகளுக்காக தினேஷ் மாஸ்டரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று, தலைவர் பதவியிலிருந்து தினேஷ் விலக வேண்டும் என்று கூறி கல்யாண் மாஸ்டர் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், லியோ படத்தில் நான் ரெடிதான் வரவா பாடலில் 1500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். நடன இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் தவிர வெளியில் இருந்து நடனப்பள்ளி சேர்ந்த நடன கலைஞர்களும் இந்த பாடலில் பங்கேற்றனர். நடன கலைஞர்களுக்கான சம்பள பணம் அனைத்தும் தயாரிப்பாளர் அலுவலகம் மூலம் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று நடிகர் தினேஷ் மாஸ்டர் விளக்கம் கூறியுள்ளார்.





