தமிழ் சினிமாவில் கடந்த 1980, 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக், அர்ஜூன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் மீனா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபகாலமாக மீனா அக்கா, அண்ணி போன்ற கேரக்டரில் நடித்து வருகிறார். டிவி சேனல்களில் ரியாலிடி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
நடிகை மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் குழந்தை நட்சத்திரமாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்த்சாமிக்கு மகளாகவும், தெறி படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மீனாவின் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் காலமானார். அதன்பிறகு சில மாதங்கள் நடிக்காமல் இருந்த நடிகை மீனா, இப்போது மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் அபுதாபியில் IIFA சினிமா விருது வழங்கும் விழா நடந்தது இந்த விழாவில் தமிழ் சினிமா படங்களுக்கும், அதில் நடிகர், நடிகை, இயக்குனர் என விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகர் விருது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரமுக்கும், அதே படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் நடந்த இந்த IIFA சினிமா விருது விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகை மீனாவை அழைத்திருந்தனர். அவரும் அந்த விழாவுக்கு சென்று நிகழ்ச்சியில்பங்கேற்றார். இந்த விழாவுக்கு தமிழ் திரைப்பட நடிகர், நடிகையர் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிற மொழிகளைச் சேர்ந்த நட்சத்திர நடிகர்களும் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை மீனா அங்கு சென்றபோது அங்கிருந்த செய்தியாளர்கள், மீடியா மீனாவைச் சந்தித்தனர். அவர்கள் முன்பு நின்றிருந்த மீனாவை, அங்கிருந்த சிலர், நீங்கள் தமிழில் பேச வேண்டாம், இந்தியில் பேசுங்கள் என்று வலியுறுத்தி கூறினார். அப்போது டென்சனாகி கோபமடைந்த நடிகை மீனா, இந்தியில் பேச வேண்டும் என்றால் என்னை எதற்கு இங்கு கூப்பிட்டீர்கள் என்று ஆவேசமாக கேட்டார். பிறகு அவர், தென்னிந்தியர்கள் மட்டும் வருகிறார்கள் என்று நினைத்தேன். தென்னிந்திய படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று அங்கு நடிகை மீனா பேசியிருக்கிறார்.





