நடிகர் ரஜினிகாந்த் இப்போதும் தமிழ் சினிமாவில் 73 வயதிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி என தென்மாவட்டங்களில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
ரஜினிகாந்தை பொறுத்த வரை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர், நடிகையர் கொண்டாடும் ஒரு நடிகராகவே அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறார். அவரது படத்தை பார்த்து ரசிக்கும் ரசிகர்களை போலவே, அவருடன் நடிக்கும் பலரும் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.
இதற்கு மிக முக்கிய உதாரணமாக கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், சிவகார்த்திகேயன், மாஸ்டா் ராகவா லாரன்ஸ் என பலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இப்போது சினிமாவில் ரஜினியுடன் நடிக்கும், ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றிருந்தாலும், திரைக்கு முன்னால் ரசிகர்களில் ஒருவராகவே அவர்கள் இருக்கின்றனர்.
இப்போதும் ரஜினி ஓகே சொன்னால், ஒரு கட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தால் அவரது முதலமைச்சர், மத்திய அமைச்சர் பதவிகள் தேடிவரும். அவராகவே தனிக்கட்சி ஆரம்பித்தாலும் பல வெற்றிகளை பெற முடியும். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் தன் பாதை சினிமா தான் என்ற முடிவில் அவர் கலை பயணத்தை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்.
இதை எல்லாம் விட மிக முக்கியமானது ரஜினியின் எளிமையும், மற்றவர்களை அவர் மதிக்கும் அந்த பெருந்தனமையும்தான். இதுகுறித்து மீசை ராஜேந்திரன் ஒரு நேர்காணலில் கூறுகையில், ரஜினியுடன் நான் சிவாஜி படத்தில் நடித்தேன். அப்போது, கேப்டனின் உடல் நலம் குறித்து ரஜினி என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த பக்கமாக, படத்தின் டைரக்டர் ஷங்கர் வந்துவிட்டார்.
என்னுடன் பேசிக்கொண்டு இருந்த போது, சகஜமாக ரஜினி இருந்தார். அப்போது சிகரெட் புகைத்தபடி என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். இயக்குநர் ஷங்கர் அங்கு வருவதை பார்த்தவுடன் கையில் இருந்த சிகரெட்டை சட்டென ரஜினி கீழே போட்டுவிட்டார். அவரது அந்த செயலை பார்த்து நான் மலைத்துப் போய்விட்டேன். எவ்வளவு பெரிய உச்சத்தில் உள்ள நடிகர் அவர், இயக்குநருக்கு இப்படி மரியாதை தருகிறாரே என அசந்து போய்விட்டேன். ஆனால் இப்போது சில நடிகர்கள் டைரக்டர் முன்பே கால்மேல் கால்போட்டு அமர்ந்துக்கொண்டு சிகரெட் பிடிக்கின்றனர், என்று கூறியிருக்கிறார் நடிகர் மீசை ராஜேந்திரன்.





