புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்து 39 ஆண்டுகள் ஆனாலும் அவரது புகழ் இன்னும் மங்கவில்லை. இப்போதும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தான் தமிழக அரசியல் களத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் ஏழைகளின் தலைவராக இருந்தவர். நடிகராக இருந்தாலும் அரசியல் தலைவராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் ஏழைகளின் தலைவர் எப்போதுமே எம்ஜிஆர் மட்டும்தான்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது நடந்த நிகழ்வு இது. அன்று ஞாயிறு தினம் என்பதால் ராமாவரம் தோட்டத்தில் பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளாக இருந்தது. வீட்டில் உள்ள ஊழியர்கள் மதியம் எம்ஜிஆர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அவரவர் வீடுகளுக்கு சென்று விடுவது வழக்கம்.
ஆனால் அன்று யாரும் மதிய உணவுக்கு பிறகும் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே இருந்துள்ளனர். ஞாயிறு விடுமுறை தினமாக இருந்தும் பணியில் இருந்த யாருமே வீட்டுக்கு செல்லாமல் இருந்ததை மாடியில் இருந்து பார்த்த எம்ஜிஆர் ஆச்சரியப்பட்டுள்ளார். ஏன் யாரும் வீட்டுக்கு செல்லவில்லை என்று விசாரித்துள்ளார்.
இன்று தூர்தர்ஷன் டிவியில் நம் நாடு படம் போடுகின்றனர். அதனால் இங்கே இருந்து அந்த படத்தை பார்த்துவிட்டு போகிறோம் என்று அனைவரும் ஒரே குரலில் கூறினர். நம்நாடு எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகும். இதற்கு எம்ஜிஆர், அப்படியா? ஓகே நானும் உங்களுடன் சேர்ந்து நானும் படம் பார்க்கிறேன் என்று சொல்லி ஹாலிலேயே உட்கார்ந்து விட்டார்.
தலைவர் வீட்டில் படம் பார்த்தால், அதுவும் தலைவருடன் அமர்ந்து படம் பார்க்கும் வாய்ப்பால் ஊழியர்கள் குஷியாகி விட்டனர். இடையிடையே பால் சூடானா பகோடா பலகாரம் பிஸ்கெட் என்று வந்துகொண்டே இருந்தது. சந்தோஷமாக படம் பார்த்த ஊழியர்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். அவர்கள் செல்வதற்காக தனியாக வாகன வசதியும் செய்து தரப்பட்டது.
மறுநாள் அந்த ஊழியர்கள் பணியாளர்கள் எல்லாம் ராமாவரம் வீட்டுக்கு வந்து வழக்கம் போல் பணிகளை செய்துவிட்டு அன்று இரவு வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். அப்போது அவர்களது வீடுகளில் புதிய டிவியும் ஆண்டெனா வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அதை பார்த்து ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உச்சம் தொட்டனர். எம்ஜிஆர் தான் இந்த ஏற்பாட்டை செய்தது என்றும் தெரிய வந்துள்ளது. அதனால் தான் இன்றும் எம்ஜிஆர் ஏழைகளின் இதய தெய்வமாக மக்கள் தலைவராக கொண்டாடப்படுகிறார்.





