நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார். இது நடிகர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் மிகப்பெரிய பாதிப்பை தந்திருக்கிறது. நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவகாரம் இப்போது நீதிமன்றம் வரை சென்று அவரை பற்றிய விமர்சனங்களுக்கு எரிகிற நெருப்பில் நெய்யை ஊற்றியது போல் மாறிவிட்டது.
கடந்து சில ஆண்டுகளாக விஜய் – மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்வதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. இது அனைத்தும் 100 சதவீதம் உண்மை என்று கடந்த 27ம் தேதி பிற்பகலில் ஊர்ஜிதமாகி விட்டது. ஏனெனில் விவாகரத்து மனுவில் எல்லா உண்மைகளையும் சங்கீதா போட்டு உடைத்து விட்டார்.
லண்டனை சேர்ந்த தொழிலதிபர் மகள் சங்கீதா நடிகர் விஜயை காதலித்து கடந்த 1999ம் ஆண்டு கரம் பிடித்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் சங்கீதா தொடுத்த விவாகரத்து வழக்கின் பின்னணியில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு பிரபல தமிழ் நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பது சங்கீதாவை மிகுந்த மன உளைச்சலை தந்துள்ளது. அந்த நடிகையுடன் விஜய் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அடிக்கடி வெளியாகி வைரலானது.
விஜயுடன் நடந்த திருமணத்தை ரத்து செய்யக் கோரி சங்கீதா தாக்கல் செய்த இந்த மனு வரும் ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அரசியல் வாழ்க்கையிலும் இது தவெக தலைவர் விஜய்க்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அவரது அரசியல் பிம்பத்தை சிதைக்கும் வகையில் இந்த விவகாரம் மாறி உள்ளதால் இந்த பிரச்னையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர விஜய் தரப்பில் தீவிர முயற்சி நடப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் தனது மனைவி சங்கீதா மற்றும் தனது பிள்ளைகளுக்காக 250 கோடி ரூபாய் ஜீவானாம்சமாக வழங்க விஜய் முன் வந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த விவாகரத்து மனுவை சங்கீதா திரும்பப் பெற வேண்டும். குடும்பத்திற்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்த்து ஒரு சமூகமான உடன்பாட்டுக்கு வரவும் இந்த பெரிய தொகையை செட்டில்மென்ட் ஆக வழங்க விஜய் சம்மதித்துள்ளார். சங்கீதாவிடம் விவாகரத்து மனுவை திரும்ப பெறுமாறு கூறி விஜய் தரப்பிலிருந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கசிந்துள்ளது. இது உண்மையா என்பது வரும் நாட்களில் உறுதியாகி விடும்.





