தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமா போற்றும் உன்னத இசை கலைஞராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படத்தின் உலகிலேயே மிக உயரிய விருதான ஆஸ்கரை பெற்று இந்தியாவை தலை நிமிர செய்தார்.
ரோஜா திரைப்படத்தில் தொடங்கி, தற்போது வெளியான மாமன்னன் திரைப்படம் வரை ரகுமானின் இசை பயணம் பல்வேறு உச்சங்களை தொட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளிலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இப்படி பலரும் போற்றும் இமயத்தின் உச்சியில் இருக்கும் ஏ ஆர் ரகுமான், சமீபத்தில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியின் மூலம் சர்ச்சைக்குள்ளானார். கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டு கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 25 ஆயிரம் பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஏ சி டி சி நிறுவனம் 40 ஆயிரம் பேருக்கு டிக்கெட் வழங்கியது. இது மட்டுமல்லாமல் அங்கு முறையாக வாகன நிறுத்துமிடம் வசதியும் செய்யப்படவில்லை. இதனால் பல கிலோமீட்டர் தூரம் வாகனத்தை நிறுத்தி நிகழ்ச்சிக்கு நடையாக சென்றவர்கள், உள்ளே அனுமதிக்கப்படாததால் கொதித்தெழுந்தனர்.
25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து டிக்கெட் வாங்கிய அவர்கள், இசை நிகழ்ச்சி காண முடியாததால் ஆத்திரமடைந்தனர். கூட்ட நெரிசல் சிக்கி பலரும் தவியாய் தவிக்க, கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை எடுத்து டிக்கெட் வைத்திருந்தவர்களுக்கு பணம் திருப்பி அனுப்பப்படும் என ஏ ஆர் ரகுமான் உறுதியளித்தார். இந்த நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ ஆர் ரகுமான் மீது புகார் அளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு, இசை கச்சேரி நடத்த ரஹ்மானை அணுகியதாகவும், அவருக்கு முன் பணமாக 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன் தொகையாய் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் கச்சேரி ரத்தாக, அந்தப் படத்தை ரகுமான் திருப்பி தரவில்லை எனக் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட புகாருக்கு ஏ ஆர் ரகுமான் தரப்பு மறுத்துள்ளது.





