கடந்த 2020ம் ஆண்டில் ஆர்ஜே பாலாஜி, எஸ்ஜே சரவணன் ஆகியோர் இயக்கத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நாயகனாக ஆர்ஜே பாலாஜி நடித்திருந்தார். ஊர்வசி, மௌலி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் போலி சாமியார்கள் ஆயிரக்கணக்கன ஏக்கர் நிலங்களை அபகரிப்பதும், மக்களை ஆன்மிக பாதையில் அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றுவதும் குறித்த சில சமூக பிரச்னைகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது.
சுவாரசியமான இந்த கதையில், ஆர்ஜே பாலாஜிக்கு அவரது குல தெய்வமான மூக்குத்தி அம்மன் நயன்தாரா நேரில் காட்சி தருவதும், நிறைய வசதிகளை தந்து, அவற்றை நீ உண்மை என்று நம்பினால் உடனே அந்த வசதிகள் மாயமாகி விடும் என்பது போன்ற சுவாரசியமான காட்சிகளால் இந்த படம் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் மீண்டும் மூக்குத்தி அம்மன் படத்தை 2ம் பாகமாக எடுக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டு அந்த படத்துக்கு மாசாணி அம்மன் என டைட்டில் வைத்தார். மேலும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை அம்மனாக நடிக்க வைக்கவும் அவர் முடிவு செய்தார். இதற்கான அறிவிப்பும் வெளியானது.
ஆனால் மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதில் நயன்தாரா தான் கதாநாயகி என்பதையும் உறுதி செய்தார். மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
ஆனால் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்தது. பல இயக்குனர்களுடன் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இப்போது அந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி தான் டைரக்ட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேய் படங்களை இயக்குவதில், காதல், காமெடி படங்களை இயக்குவதில் வல்லவராக சுந்தர் சி முதன்முறையாக பக்தி படத்தை இயக்கப் போவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





