தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 1976ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா இதுவரை 1300க்கும் மேற்பட்ட படங்களும், பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார். சிம்பொனி இசைக்கும் சொந்தக்காரர்.
இசையில் வேறு யாரும் சாதிக்க விஷயங்களை நான் கடந்த 47 ஆண்டுகளாக சாதித்து காட்டியிருக்கிறேன். நான் கர்வம் காட்டாமல், தலைக்கணம் செய்யாமல் வேறு யார் அதை செய்ய முடியும். எனக்குதான் வர வேண்டும் கர்வமும் தலைகணமும் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார் இசைஞானி இளையராஜா.
இசையில் ஒரு சக்ரவர்த்தியாக இசைஞானி திகழ்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் இப்படி தன்னைப் பற்றி கர்வமாகவும் பெருமிதமாகவும் அவர் பேசிக்கொள்வதும் வழக்கமாகி விட்டது. அதுபற்றி விமர்சனம் சர்ச்சை எழுந்தாலும் அவர் கண்டுகொள்வது இல்லை. இசைத்துறையில் எந்த குறையும் இல்லாத அவர், பொதுவாழ்வில் விமர்சிக்கப்படுபவராக இருக்கிறார்.
அதே நேரத்தில் அவர் இசையமைத்த பாடல்களை, யாரேனும் தங்களது படங்களில் பயன்படுத்தினால் உடனே காப்பி ரைட் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது இசைஞானியின் வழக்கமாக உள்ளது. சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே கூலி படத்தின் டிரெய்லரில் தனது இசையை பயன்படுத்தி விட்டதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா போலவே, தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேனிசை தென்றல் தேவா. அண்ணாமலை சூரியன் வசந்த காலப் பறவை அருணாசலம் அவ்வை சண்முகி ஆசை இந்து குஷி காதல் கோட்டை பாட்ஷா என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. அவரது பல பாடல்களை இளையராஜாவின் இசையில் உருவானதாக ரசிகர்கள் பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தேனிசை தென்றல் தேவா கூறியதாவது, நான் இசையமைத்த பாடல்களுக்கு நான் காப்பி ரைட் கேட்க மாட்டேன். அப்படி கேட்டால் பணம் வரும், இந்த புகழ் வருமா. நான் அப்போ போட்ட பாட்டை, இப்போ வர்ற படத்துல போடறாங்க. அதனால் நான் திரும்பவும் வர்றேன். 2கே கிட்ஸ் வரைக்கும் என்னை தெரியுது. எனக்கு இதுதான் முக்கியம். பணத்தை விட குழந்தைங்க ரசிக்கணும். அது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது, என்று தேவா கூறியிருக்கிறார்.





