இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரகுமான். இசையில் அவர் சாதிக்காதது எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு ஏதுமில்லை. ஆஸ்கர் விருது வென்றார். இதுவரை 7 முறை தேசிய விருது பெற்றவர். விருதுகளுக்கே பெருமை சேர்ந்த இசை வித்தகராக ஏஆர் ரகுமான் போற்றப்படுகிறார்.
சினிமா ரசிகர்களால் இசைப்புயலாக அறியப்பட்ட ஏஆர் ரகுமான், இப்போது லி மாஸ் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இதுகுறித்து ஏஆர் ரகுமான் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் 13 வயதில் இருந்து சினிமாவில் இருக்கிறேன். அதே ஸ்கிரீனை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்.
ஏன் சினிமா இப்படியே இருக்கிறது. வேறு ஏதாவது செய்யலாமே என்று யோசனை தோன்றியது. அந்த நேரத்தில் தான் என்னுடைய நண்பர் ஒருவர் விர்ச்சுவல் ரியாலிட்டியில் சில மாற்றம் செய்ய முடியும் என்று என்னிடம் கூறினார். அப்போது நான் இதைப்பற்றி என்னுடைய முன்னாள் மனைவி சாய்ராவிடம் சொன்னேன்.
அவர் ஒரு கதையை உருவாக்கி என்னிடம் சொன்னார். ஒரு சின்ன பொண்ணோட அப்பா அம்மாவை கொலை பண்ணிட்டாங்க. அந்த பொண்ணு வாசனையை வைத்து அம்மா அப்பாவை கொன்றவர்களை கண்டுபிடிப்பது தான் கதை. எனக்கு பிடித்திருந்ததால் அதை படமாக எடுக்க முடிவு செய்தேன்.
பிறகு என் ஸ்டூடியோவில் என் மகள் மற்றும் அசிஸ்டண்டுகளை வைத்து டம்மியா படத்தை எடுத்தோம். அப்போதே மனசுக்குள், அட டைரக்சன் இவ்வளவுதானா என்ற தைரியம் எனக்கு வந்துவிட்டது. இதற்கு முன் நான் டைரக்சன் பண்ணுனது இல்லை. ஆனால் தியேட்டர் அனுபவம் இருந்தது. இருந்தாலும் இன்னும் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக ஆக்டிங் ஒர்க் ஷாப் ரைட்டிங் ஒர்க் ஷாப் போய் அனைத்தையும் நன்றாக பார்த்து தெரிந்து கொண்டேன்.
அப்போதுதான் என் நண்பர்கள், நீயே பண்ணு என்று சொன்னதால் நானே படத்தை டைரக்ட் செய்து விட்டேன். என் ரசிகர்கள் தான் என்னோட உசுரே… அவர்கள் இல்லை என்றால் என் வண்டி ஓடாது. ஒவ்வொரு ரசிகரும் என்னை அவரது குடும்பத்தில் ஒருத்தராக நினைத்து அன்பும் ஆதரவும் காட்டுகிறார்கள் என்று அந்த நேர்காணலில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் கூறியிருக்கிறார்.





