மகாராஜா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதில் தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க ரயிலில் நடைபெறும் கதை போல் இது எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோக மிஷ்கின் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் பிசாசு 2 திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அடுத்ததாக ஏஸ் என்னும் படத்திலும் அவர் வருகிறார். தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை நயன்தாரா தயாரிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கடைசியாக பாண்டி ராஜ், குடும்பங்களை மையப்படுத்திய கதைகளையே இயக்கி வருகிறார். இதில் அவருக்கு கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. சிவகார்த்திகேயனை வைத்து அவர் எடுத்த எங்க வீட்டுப் பிள்ளையும் ரீச் ஆனது.
ஆனால் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இப்படியான நிலையில்தான், பாண்டிராஜ் தனது அடுத்த திரைப்படத்திற்காக விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து இருக்கிறார். இதுவும் நகைச்சுவை கலந்த ஒரு கமர்சியல் படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மிஷ்கினும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான பதிலை தற்போது இயக்குனர் அளித்திருக்கிறார். நித்யா மேனன் உடன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஷ்கின், விஜய் சேதுபதி – நித்யா மேனன் திரைப்படத்தில் நடிக்க எனக்கும் ஆசைதான்.
ஆனால் பாண்டியராஜ் பிளான் பண்ணி என்னை நடிக்க விடாமல் செய்துவிட்டார். அவர் என்னிடம் வந்து 45 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டார். அப்படி என்றால் எனக்கு இத்தனை ரூபாய் தாருங்கள் நடிக்கிறேன் என்று கூறினேன். அதைக் கேட்டுவிட்டு அவர் ஓடியே போய்விட்டார் என்று தெரிவித்தார். உடனே அருகில் அமர்ந்திருந்த நித்யா மேனனிடம், நான் ஐந்து கோடி ரூபாய்க்கு கேட்டேன் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.





