தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த மார்ச் 10ம் தேதி இயற்கை உபாதை கழிக்க காட்டுக்குள் சென்றார். அப்போது மர்ம நபரால் கடத்தப்பட்டு மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்வி சேகரிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எஸ்வி சேகர் கூறியதாவது, தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களையும் சட்டம் ஒழுங்கையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பெண் குழந்தைகளை பெற்றோர்தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த பெண் புதருக்குள் சென்றதாக சொல்கிறார்கள். அவர் ஏன் அங்கு சென்றார்? புதருக்கு எல்லாம் போலீசார் விளக்கு போட முடியுமா? சுதந்திரத்தை விட பாதுகாப்பு தான் முக்கியம் என்று எஸ்வி சேகர் பதில் கூறினார். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலேயே தவறு இருப்பது போல எஸ்வி சேகரின் கூறியது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கு பாடகி சின்மயி தனது வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் பாடகி சின்மயி கூறியிருப்பதாவது, வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி இயற்கை உபாதை கழிக்க செல்லும் சிறுமிகளும் இளம்பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இந்தியாவில் தொடர்கதையாக உள்ளது.
ஆனால் எவ்வித அச்சமும் இன்றி தாங்கள் விரும்பும் இடத்தில் பாதுகாப்பாக சிறுநீர் கழிக்க கூடிய ஆண்களால் பெண்களின் இந்த துயரத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். மேலும் காவல்துறையால் எல்லா இடங்களிலும் விளக்கு போட முடியாது என்று பொறுப்பெற்ற முறையில் எஸ்வி சேகர் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் பாடகி சின்மயி அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
நடிகர் எஸ்வி சேகர் திமுக ஆட்சிக்கு முட்டு கொடுக்கும் விதமாக பெண்களும் பெற்றோர்களும் தான் கவனமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொறுப்பற்ற முறையில் பேசியதற்கு பாடகி சின்மயி தந்த சரியான பதிலடி என்று பலரும் கூறுகின்றனர். ஆண்களால் எந்த இடத்திலும் பேண்ட் ஜிப்பை கழட்டி சிறுநீர் கழிக்க முடியும். பெண்களால் அது முடியுமா? என்ற பாடகி சின்மயி கேட்ட பிறகாவது எஸ்வி சேகர் போன்றவர்கள் தங்களது ஆணவப் பேச்சை தவிர்க்க வேண்டும் என்று பலரும் விமர்சிக்கின்றனர்.





